ஜேர்மனியில் வாழும் பிரித்தானியர்களின் ஓட்டுநர் உரிமம் தொடர்பில் ஒரு செய்தி
பிரெக்சிட்டுக்குப் பின் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வாழும் பிரித்தானியர்களுக்கு, அந்த நாடுகளில் தங்கள் பிரித்தானிய ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்தமுடியுமா அல்லது அதை அந்தந்த நாட்டு ஓட்டுநர் உரிமமாக மாற்றிக்கொள்ளவேண்டுமா என்ற கேள்வி எழுந்தது.
ஜேர்மனியைப் பொருத்தவரையில், ஜேர்மனியில் வாழும் பிரித்தானியர்கள் தேர்வு எழுதாமலேயே தங்கள் பிரித்தானிய ஓட்டுநர் உரிமத்தை பிரித்தானிய ஓட்டுநர் உரிமமாக மாற்றிக்கொள்ளும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட உள்ளது.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, ஜேர்மனியில் வாழும் பிரித்தானியர்கள், ஆறு மாதங்களுக்குள் தங்கள் பிரித்தானிய ஓட்டுநர் உரிமங்களை ஜேர்மன் ஓட்டுநர் உரிமங்களாக மாற்றிக்கொள்ளவேண்டும்.
இதுவரை தங்கள் ஓட்டுநர் உரிமங்களை மாற்றிக்கொள்ளாதவர்கள், இந்த ஆண்டு (2021) ஜூன் 30 ஆம் திகதிக்குள் அதை மாற்றிக்கொள்ளவேண்டும்.
அதே நேரத்தில், ஒருவரது பிரித்தானிய ஓட்டுநர் உரிமம் தொலைந்து போயிருந்தாலோ, காலாவதியாகியிருந்தாலோ அதை மாற்ற இயலாது என பிரித்தானிய அரசே கூறிவிட்டது.
ஜேர்மனிக்கு வருகை தரும் ஜேர்மன் வாழிட உரிமம் இல்லாத பிரித்தானியர்களைப் பொருத்தவரை, அவர்கள் குறுகிய காலம் மட்டுமே ஜேர்மனியில் தங்குவதால் அவர்கள் பிரித்தானிய ஓட்டுநர் உரிமத்தையே ஜேரனியில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
பிரித்தானிய ஓட்டுநர் உரிமங்களை ஜேர்மன் உரிமங்களாக மாற்ற, தேர்வு எழுதத் தேவையில்லை என்றாலும், கண் பார்வை சரியாக உள்ளதா என்பதை அறியும் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வதுடன் முதலுதவி பயிற்சியும் பெற்றுக்கொள்ளவேண்டும்.
அத்துடன், அடையாள அட்டை, முகவரிச்சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்கவேண்டும். ஒருவேளை நீங்கள் பிரித்தானிய ஓட்டுநர் உரிமத்தை கைவிட்டு ஜேர்மன் ஓட்டுநர் உரிமம் பெற்றுக்கொள்ள முடிவு செய்தால், பின்னாட்களில் நீங்கள் பிரித்தானியாவுக்கு திரும்பவேண்டிய சூழல் ஏற்பட்டாலும், அப்போது மீண்டும் அதை பிரித்தானிய ஓட்டுநர் உரிமமாக மாற்றிக்கொள்ளமுடியும் என்பதால், அதுக்குறித்து கவலைப்படவேண்டியதில்லை.
அல்லது, ஜேர்மனியிலிருந்து மற்றொரு ஐரோப்பிய ஒன்றிய நாட்டுக்கு நீங்கள் சென்று வாழ முடிவு செய்தால், ஜேர்மன் ஓட்டுநர் உரிமத்தையே அங்கு பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.