மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப அஞ்சாதீர்!பெற்றோருக்கு சுகாதாரத்தரப்பினர் அறிவுறுத்தல்
பாடசாலைகளில் சுகாதாரப்பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், பெற்றோர் எவ்வித அச்சமுமின்றி மாணவர்களைப் பாடசாலைகளுக்கு அனுப்புமாறு சுகாதாரத்தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்துரைத்துள்ள கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா,
"மாணவர்களைப் பாடசாலைக்கு அனுப்புவதில் சிறிதேனும் அச்சம்கொள்ளத் தேவையில்லை. தற்போதைய நிலையில் எமது பிள்ளைகள், முகக்கவசம் அணிவதற்குப் பழக்கப்படுத்தப்பட்டுள்ளனர்.
விசேடமாக இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் கூட முகக்கவசம் அணிவதற்குப் பழக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளின் சிற்றுண்டிச்சாலைகளில் உணவு உண்பதற்கு சிறுவர்களைப் பழக்கப்படுத்த வேண்டாம்.
பாடசாலைகள் மற்றும் பாடசாலைகளுக்கு வெளியில், எவ்வாறான சுகாதார நடைமுறைகளைப் பேண வேண்டும் என்று சிறுவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்.
நாடளாவிய ரீதியில் உள்ள சகல அரச பாடசாலைகளிலும் ஆரம்ப வகுப்புகள், சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக நாளை (25) ஆரம்பமாகவுள்ளன.
கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக பாடசாலைகளில் கிருமி தொற்றுநீக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.