அஸ்ட்ராஜெனெகா போடாதீர்கள்... அதற்கு பதிலாக இந்த தடுப்பூசிகளை போடுங்க: பிரான்ஸ் முக்கிய அறிவிப்பு
55 வயதிற்குட்பட்டவர்கள் தங்கள் இரண்டாவது டோஸுக்கு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போடுவதற்கு பதிலாக மற்றொரு தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு பிரான்ஸ் அறிவித்துள்ளது.
பிரான்ஸ் சுகாதார அமைச்சர் ஆலிவர் வாரன் கூறியதாவது, அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை முதல் டோஸாக போட்டுக்கொண்ட 55 வயதிற்குட்பட்டவர்கள், இரண்டாவது டோஸுக்கு மாடர்னா மற்றும் ஃபைசர் போட்டுக்கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதுதொடர்பான பிரான்ஸ் சுகாதார கட்டுப்பாட்டு அமைப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று பிற்பகுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை முதல் டோஸாக போட்டுக்கொண்ட 60 வயதிற்குட்பட்டவர்கள், இரண்டாவது டோஸ் ஃபைசர் அல்லது மாடர்னா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என்று ஜேர்மனி மீண்டும் வலியுறுத்திய பின்னர் பிரான்ஸ் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளது.
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி மூளையில் ஆபத்தான இரத்த உறைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சத்தில் ஒரு வாரத்திற்கு முன்பு இந்த ஆலோசனை வழங்கப்பட்டது.
ஆக்ஸ்போர்டு / அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியினால் ஏற்படும் ஆபத்துகளை விட நன்மைகள் அதிகமாக இருப்பதாக இங்கிலாந்து மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.