ரஷ்யாவுக்கு சென்றால் பிரித்தானியா திரும்புவது கடினம்: பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
உக்ரைன் ஊடுருவலைத் தொடர்ந்து உருவாகியுள்ள பிரச்சினைகள் காரணமாக, பிரித்தானியர்கள் யாரும் ரஷ்யாவின் எந்த பகுதிக்கும் பயணிக்கவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விமான சேவை இல்லாததாலும், ரஷ்ய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை காரணமாகவும், அந்நாட்டுக்குப் பயணிக்கவேண்டாம் என பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் பிரித்தானியர்களை அறிவுறுத்தியுள்ளது.
பிரித்தானியா கடந்த வாரம் ரஷ்ய விமானங்கள் பிரித்தானியாவுக்குள் நுழைய தடை விதித்தது. பதிலுக்கு, ரஷ்யாவும் பிரித்தானிய விமானங்களுக்குத் தடை விதித்தது.
அத்துடன், ஐரோப்பிய ஒன்றியமும் தங்கள் வான்வெளியில் பறக்க ரஷ்ய விமானங்களுக்குத் தடை விதித்துள்ளது.
ஆக, பிரித்தானியர்கள் ரஷ்யா சென்றால், அங்கிருந்து நேரடியாகவோ, ஐரோப்பிய ஒன்றியம் வழியாகவோ பிரித்தானியா திரும்ப விமான சேவை கிடையாது. ஆகவேதான், பிரித்தானியர்கள் ரஷ்யாவுக்குச் செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.
மேலும், ரஷ்ய கரன்சியில் மதிப்பு கணிசமாக குறைந்துள்ளது என்று கூறியுள்ள வெளியுறவு அலுவலக அறிக்கை, ஏராளமானோர் ரஷ்ய வங்கிகளிலிருந்து தங்கள் பணத்தை எடுக்க முயன்று வருவதாகவும், ரஷ்யாவிலிருக்கும் வெளிநாட்டவர்கள், ஏடிஎம்கள் மற்றும் வங்கிகளைப் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பிரித்தானியர்கள் உக்ரைனுக்கும் பயணிக்கவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.