சுவிட்சர்லாந்து நாட்டவர்கள் ஆங்கிலம் பேச தடுமாறுகிறார்களா?: ஆய்வில் வெளியாகியுள்ள ஆச்சரிய தகவல்
ஆங்கில மொழிப் புலமை தொடர்பான சர்வதேச ஒப்பீட்டு பட்டியலில், சுவிட்சர்லாந்து 2020ஆம் ஆண்டில் இருந்த இடத்திலிருந்து ஏழு இடங்கள் கீழிறங்கி 25ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
தனியார் கல்வி மற்றும் மொழிப்பயிற்சி நிறுவனமான EF நேற்று வெளியிட்ட 100 நாடுகளின் பட்டியலில், முதன்முறையாக சுவிட்சர்லாந்து முதல் 20 இடங்களுக்குள் இடம்பெறத் தவறியுள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், கென்யா, பல்கேரியா, கிரீஸ், எஸ்டோனியா மற்றும் ஸ்லோவேகியா ஆகிய நாடுகளை விட சுவிட்சர்லாந்து பின்தங்கிவிட்டதுதான். அந்த வகையில், நெதர்லாந்து, ஆஸ்திரியா மற்றும் டென்மார்க் நாட்டவர்கள், ஆங்கிலப் புலமையில் சிறந்து விளங்குகிறார்கள்.
இந்த ஆய்வில், ஆங்கிலம் அதிகாரப்பூர்வ மொழியாக இல்லாத நாடுகளில் ஆங்கிலப் புலமை எவ்விதம் உள்ளது என்பது கருத்தில் கொள்ளப்படுகிறது.
எட்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய இந்த ஆய்வில் இதுவரை சுவிட்சர்லாந்து நல்ல இடத்தில்தான் இருந்துவந்தது. 2011இல், அது 11ஆவது இடத்திலிருந்தது. ஆனால், இப்போது 25ஆவது இடத்துக்கு வந்துவிட்டது.
இப்படி சுவிட்சர்லாந்து கீழிறங்கக் காரணம் என்ன என கேள்வி எழுப்பப்பட்டபோது, 2011க்குப் பிறகு ஐரோப்பாவில் ஆங்கில அறிவு மேம்படுள்ளதாகவும், பல நாடுகள் சுவிட்சர்லாந்தைவிட தங்களை மேம்படுத்திக்கொண்டதாகவும், அதனாலேயே சுவிட்சர்லாந்து 25ஆவது இடத்துக்கு வந்துவிட்டதாகவும், ஆய்வு நிறுவனமான EF தெரிவித்துள்ளது.