கனடாவுக்கு உங்கள் பெற்றோரை வரவழைக்கும் திட்டம் உள்ளதா?: உங்களுக்காக சில அடிப்படை தகவல்கள்
கனடாவில், 2022ஆம் ஆண்டுக்கான பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி ஸ்பான்சர்ஷிப் திட்டம் (Parents and Grandparents Program - PGP 2022) எப்போது துவங்கும் என்பதைக் குறித்து இதுவரை விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஆனாலும், 2021-2023க்கான புலம்பெயர்தல் மட்ட திட்டத்தின்படி (Immigration Levels Plan 2021-2023), கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, 2022ஆம் ஆண்டுக்கான பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி ஸ்பான்சர்ஷிப் திட்டத்தின் கீழ், 23,500 புலம்பெயர்வோரை வரவேற்க உள்ளது என்ற ஒரு தகவல் மட்டும் கிடைத்துள்ளது.
இந்த செய்தியில், கனடாவின் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி ஸ்பான்சர்ஷிப் திட்டத்துக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்பது குறித்து பார்க்கலாம்.
- கனடாவின் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி ஸ்பான்சர்ஷிப் திட்டத்தின் கீழ், உங்கள் பெற்றோர், அல்லது உங்கள் தாத்தா பாட்டியை, கனடாவில் வாழச்செய்வதற்காக வரவழைப்பதற்காக விண்ணப்பிப்பதற்கு, நீங்கள் ஒரு கனேடிய குடிமகன் அல்லது கனேடிய நிரந்தர வாழிட உரிமம் கொண்டவர் அல்லது கனேடிய இந்தியச் சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள இந்தியராக இருக்கவேண்டும்.
- உங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது ஆகியிருக்கவேண்டும்.
- நீங்கள் கனடாவில் வாழ்பவராக இருக்கவேண்டும்.
- கனடாவின் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி ஸ்பான்சர்ஷிப் திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கு, தேவையான குறைந்தபட்ச வருவாய் கொண்டவராக இருக்கவேண்டும். (தம்பதியர் என்றால், உங்கள் இருவரின் மொத்த வருவாயையும் இணைந்து கணக்கிட்டு, ஒருமித்து விண்ணப்பத்தில் கையொப்பமிடலாம்)
- உங்களால் ஸ்பான்ஸர்ஷிப் செய்யப்பட்டவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு நிதி உதவி செய்வதாகவும், அந்த காலகட்டத்தில் அவர்கள் அரசு உதவி ஏதாவது பெற்றால் அதை திருப்பி அளிப்பதாகவும் சட்டப்படி உறுதியளிக்கும் ஆவணத்தில் கையொப்பமிடவேண்டும்.
தேவையான குறைந்தபட்ச வருவாய் (The minimum necessary income - MNI) என்பது, உங்கள் குடும்பத்தின் அளவையும் நீங்கள் கனடாவில் எங்கு வாழ்கிறீர்கள் என்பதையும் பொருத்தது என்பதை கவனத்தில் கொள்ளவும்.