சென்னை மருத்துவர் கொலையில் திடீர் திருப்பம்! விசாரணையில் சிக்கிய காதலி.. வெளியான உண்மை
பெங்களூரில் கொல்லப்பட்ட சென்னை மருத்துவர் வழக்கில் திடீர் திருப்பமாக காதலி கைது செய்யப்பட்டுள்ளார்
நண்பர்கள் பேச்சுவார்த்தையின் போது தாக்கியதாக கூறப்பட்ட நிலையில், திட்டமிட்டே கொலை செய்ததாக விகாஷின் காதலி வாக்குமூலம் அளித்துள்ளார்
இந்திய மாநிலம் கர்நாடகாவில் இளம் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த விகாஷ் ராஜன் (27) என்பவர் முழுநேர மருத்துவராக பணியாற்ற இந்திய மருத்துவ தேர்வில் தேர்ச்சி பெற பெங்களூரில் தங்கி படித்து வந்தார்.
அப்போது இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்படவே இருவரும் காதலித்து பின் லிவிங் டூ கெதர் உறவில் இருந்துள்ளனர். இந்த நிலையில் விகாஷ் ராஜன் கடந்த மாதம் 10ஆம் திகதி, அவரது காதலியின் நண்பர்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார்.
தனது நிர்வாணப் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டதால் ஏற்பட்ட தகராறில், தன் நண்பர்கள் இரும்புக் கம்பியால் தாக்கியதாக விகாஷின் காதலி பொலிஸாரிடம் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அப்பெண்ணின் 3 நண்பர்களையும் பொலிஸார் கைது செய்தனர். ஆனால் விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த பொலிஸார் விகாஷின் காதலியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது.
குறித்த பெண் தன் ஆண் நண்பர் சுஷிலுடன் உறவில் இருக்க முயன்றுள்ளார். இந்த விடயம் விகாஸுக்கு தெரிய வரவே, தனது காதலியிடம் சண்டையிட்டுள்ளார்.
இதுகுறித்து சுஷில் மற்றும் அவரது நண்பர்களுடன் பேசிய அப்பெண், விகாஷை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படியே பேச்சுவார்த்தைக்கு என அழைத்து விகாஷை கொடூரமாக தாக்கியுள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த விகாஷ் உயிரிழந்தார். விசாரணைக்கு பின்னர் அப்பெண் கைது செய்யப்பட்டார்.