ஜேர்மனியில் 15 நோயாளிகளைக் கொன்ற மருத்துவருக்கு ஆயுள் தண்டனை
அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து பயன்படுத்தி 15 நோயாளிகளைக் கொன்ற ஜேர்மன் மருத்துவர் ஒருவருக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
70-க்கும் மேற்பட்டோரை
பல டசின் கொலைகள் தொடர்பாக அவர் தொடர்ந்து விசாரணையில் உள்ளார்.

செப்டம்பர் 2021 முதல் ஜூலை 2024 வரையிலான காலகட்டத்தில், நோயாளிகளின் வீடுகளுக்குச் சென்று சிகிச்சை அளித்தபோது 12 பெண்கள் மற்றும் மூன்று ஆண்களைக் கொன்றதாக, ஜோஹன்னஸ் என்று மட்டும் அடையாளம் காணப்பட்ட 41 வயதுடைய மருத்துவர் மீது பெர்லின் நீதிமன்றம் குற்றவாளி எனத் தீர்ப்பளித்துள்ளது.
ஆனால், 15 என்ற எண்ணிக்கை அவரது பல குற்றங்களில் ஒரு சிறு பகுதியாக மட்டுமேயாக இருக்கக்கூடும் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார். குறித்த மருத்துவர் மேலும் 70-க்கும் மேற்பட்டோரைக் கொன்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் விசாரணையின்போது தெரிவித்தனர்.
அவரது குற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவிலான தீவிரத் தன்மையைக் கொண்டிருப்பதாக நீதிமன்றம் கண்டறிந்ததால், அவருக்கு மிகக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது; இது அவர் எதிர்காலத்தில் விடுதலையாவதை மிகவும் கடினமாக்கியுள்ளது.
அவர் இனி ஒருபோதும் மருத்துவம் பார்ப்பதைத் தடை செய்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த மருத்துவர் தன் நோயாளிகள் மீதான இரக்கத்தினாலோ அல்லது கருணைக்கொலை குறித்த தவறான எண்ணத்தினாலோ கொலை செய்யவில்லை, மாறாக, பாதிக்கப்பட்டவர்கள் மீது அதிகாரம் செலுத்தும் வெறியாலேயே கொலை செய்தார் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கொலையாளியிடம் கொலை செய்வதில் ஒரு வெறி இருந்ததாகக் குறிப்பிட்ட அரசுத் தரப்பு சட்டத்தரணிகள், இவர்களைக் கொல்வதில், கொலை செய்யும் செயலைத் தவிர வேறு எந்த நோக்கமும் அந்த மருத்துவருக்கு இருக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அச்சமயத்தில் அவரது மருத்துவக் கண்காணிப்பில் இருந்தவர்கள் என்பதுடன் அவர்களின் வயது 25 முதல் 94 வரை எனவும் விசாரணையில் தெரிய வந்தது.
தன் மீதே தனக்கு விரக்தி
மேலும், கொலைகளை மறைப்பதற்காக, குறைந்தது ஐந்து சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடியிருப்புகளுக்கு அவர் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது.
திங்கட்கிழமை அன்று, ஜோஹன்னஸ் தான் மக்களைக் கொன்றதாக ஒப்புக்கொண்டதோடு, தன் மீதே தனக்கு விரக்தி ஏற்படுவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஒரு சந்தர்ப்பத்தில், அவர் ஒரே நாளில் இரண்டு நோயாளிகளைக் கொன்றுள்ளதும் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஜோஹன்னஸின் செயல்பாடுகள் குறித்து ஆரம்பத்தில் காப்பக சேவைகள் தரப்பிலிருந்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறை விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அவர் ஆகஸ்ட் 2024-இல் சிறையில் அடைக்கப்பட்டார். தொடக்கத்தில், விசாரணை அதிகாரிகள் நான்கு வழக்குகளை விசாரித்தனர்; ஆனால் சந்தேகத்திற்கிடமான மரணங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்ததால், மேலும் பல வழக்குகள் இன்னும் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
85 நோயாளிகளைக் கொன்றதற்காக 2019-இல் ஆயுள் தண்டனை பெற்ற ஜேர்மன் செவிலியர் நீல்ஸ் ஹோகலின் (Niels Hoegel) வழக்கை இந்த வழக்கு நினைவூட்டுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |