உடற்பயிற்சியின் போது உயிரிழந்த இரண்டு நடிகர்கள் புனித், சிரஞ்சீவி சர்ஜா! எச்சரிக்கும் பிரபல மருத்துவர்
கன்னட திரையுலகின் முக்கிய நடிகர்களான சிரஞ்சீவி சர்ஜா மற்றும் புனித்ராஜ்குமா ஆகியோர் உடற்பயிற்சியின் போது ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுத்தியுள்ள நிலையில், மருத்துவர் ஒருவர் இது குறித்து பேட்டியளித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அர்ஜுனின் அக்கா மகன் சிரஞ்சீவி சர்ஜா(36) கன்னட திரையுலகில் ஒரு சிறந்த நடிகராக வலம் வந்தார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜுன் மாதம் 7-ஆம் திகதி, இவர் தன்னுடைய வீட்டில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது, திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இந்த செய்தி கன்னட திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சிரஞ்சீவி சர்ஜா பிரபல நடிகையான மேக்னா ராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அவர் உயிரிழந்த போது மேக்னாராஜ் நிறைமாத கர்ப்பிணி பெண்ணாக இருந்தார். இதையடுத்து தற்போது கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான புனித்ராஜ்குமார்(46), இதே போன்று நேற்று முன் தினம் தன்னுடைய வீட்டில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது, நெஞ்சுவலி ஏற்பட்டு, அதன் பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, உயிரிழந்தார்.
இப்படி இரண்டு பேருமே உடற்பயிற்சி செய்யும் போது உயிரிழ்ந்துள்ளதால், கடுமையான உடற்பயிற்சி மாரடைப்பிற்கு வழிவகுப்பதாக சமூகவலைத்தளங்களில் ஒரு விவாதமே சென்றது.
இந்நிலையில், இது குறித்து பிரபல மருத்துவர் பி.எம்.ஹெக்டே இந்து தமிழ் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், பல நேரங்களில் நீண்ட நேர கடுமையான உடற்பயிற்சி திடீர் மாரடைப்புக்கும், திடீர் இதய செயலிழப்புக்கும் வழிவகுக்கிறது.
ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்பவர்கள், நீண்ட நேரம் வேகமாக ஓடுபவர்களுக்கு அதிகளவில் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன. நமது இதயம் மிகவும் மென்மையானது. பிட் ஆக இருக்க வேண்டும் என்பதற்காக நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதால் இதயம் பலவீனம் அடைகிறது.
தொடர்ச்சியாக கடும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதால் இதய வால்வுகள் கூடுதல் தடிமனாகவும், அதில் அடைப்புகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதனாலேயே அதிகமான எடை தூக்குவது, இடைவெளி இல்லாமல் கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்வது ஆகியவற்றால் நெஞ்சுவலி, திடீர் மாரடைப்பு ஏற்படுகிறது.
ஏற்கெனவே இதயம், நுரையீரல் தொடர்பான நோய்கள் இருப்பவர்கள் கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. 30 நிமிடங்கள் அளவுக்கு மிதமான உடற்பயிற்சி மேற்கொள்வதும், நமது அன்றாட பணிகளை நாமே செய்தாலே உடல்ஆரோக்கியமாக இருக்கும்.
இவை எல்லாவற்றையும் விட மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டாலே மாரடைப்பு ஏற்படாது என்று கூறியுள்ளார்.