பிரித்தானியா தேவையில்லாமல் அளவுக்கு மீறி பயப்படுகிறது... Omicron வைரஸைக் குறித்து முதன்முதலில் எச்சரித்த மருத்துவர்
Omicron வைரஸைக் குறித்து எனக்குத்தான் அதிகம் தெரியும். அவ்வகையில், Omicron வைரஸைக் குறித்து பிரித்தானியா overreact செய்கிறது. அதாவது, தேவையில்லாமல் அளவுக்கு மீறி பயப்படுகிறது என்று கூறியுள்ளார் அந்த வைரஸைக் குறித்து முதன்முதலில் உலகை எச்சரித்த மருத்துவர்.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், Omicron ஆழிப்பேரலை உருவாகும் என மக்களை எச்சரித்துள்ளதைத் தொடர்ந்து மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த மாத இறுதிக்குள், பிரித்தானியாவில் ஒரு மில்லியன் பேர் Omicron வைரஸால் பாதிக்கப்படுவார்கள் என்றும், நாளொன்றுக்கு 10,000 பேர் வரை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படலாம் என்பதால் மருத்துவ அமைப்பு அழுத்தத்திற்குள்ளாகும் என்றும், கிறிஸ்துமஸ் பண்டிகை ரத்து செய்யப்படலாம், புத்தாண்டில் பொதுமுடக்கம் அறிவிக்கப்படலாம் என்றெல்லாம் கருத்துக்கள் நிலவுகின்றன.
ஆனால், Omicron வைரஸைக் குறித்து முதன்முதலில் எச்சரித்தவரான தென்னாப்பிரிக்க மருத்துவர் Angelique Coetzee என்பவரோ, Omicron வைரஸைக் குறித்து பிரித்தானியா overreact செய்கிறது. அதாவது, தேவையில்லாமல் அளவுக்கு மீறி பயப்படுகிறது என்று கூறியுள்ளார்.
Omicron வைரஸைக் குறித்து தெரியவந்ததும், உலகமே பரபரப்பாகிவிட்டது, பிரித்தானியாவும், சில ஐரோப்பிய நாடுகளும் தென்னாப்பிரிக்கா மீது கடுமையாக பயணத்தடைகள் விதிக்கின்றன, வீட்டுக்குள் மாஸ்க் அணியவும், கட்டுப்பாடுகளுக்கு உட்படாவிட்டால் அபராதம் விதிக்கவும், அதிகப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் முதலான கட்டுப்பாடுகளை விதிக்கவும் செய்கின்றன.
ஆனால், இப்படி கட்டுப்பாடுகளை விதிக்க முடிவெடுக்கும் அளவுக்கு நமக்கு Omicron வைரஸைக் குறித்து எதுவுமே தெரியாதே என்று கூறும் Angelique, பிரித்தானியாவின் சமீபத்திய நடவடிக்கைகள் என்னை அதிக வியப்பிலாழ்த்துகின்றன என்கிறார்.
அதிக அளவில் Omicron வைரஸ் தொற்றிய நோயாளிகளுடன் எனது நேரத்தை செலவிட்டவள் நான் என்கிற முறையில், Omicron வைரஸ் மனிதர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து எனக்கு அதிகம் தெரியும் என நான் கூறமுடியும் என்கிறார் அவர்.
33 ஆண்டுகள் மருத்துவராக பணியாற்றியவள் என்கிற வகையில், Omicron வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை முதலில் பார்த்த மருத்துவர்களில் நானும் ஒருவர். இதற்கு முன் தோன்றிய டெல்டா வைரஸை விட, Omicron வைரஸால் ஏற்படும் அறிகுறிகள் தீவிரம் குறைந்தவை.
சொல்லப்போனால், சில நோயாளிகள், ’கொரோனா வரக்கூடாதுதான், ஆனால், இந்த Omicron கொரோனா வைரஸ் தாக்கியது எங்கள் அதிர்ஷ்டம்’ என்று கூட கூறியிருக்கிறார்கள்.
நாங்கள் நோயாளிகளை நேரடியாக பார்த்து இந்த விடயங்களைக் கூறுகிறோம், புள்ளிவிவரங்கள் அடிப்படையிலான கணிப்புக்களை வைத்து நாங்கள் பேசவில்லை.
என்னிடம் முதன்முதலில் வந்த, Omicron கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியைப் பார்த்து, அவர் பகல் முழுவதும் வெயில் உழைத்ததால் சோர்ந்துபோயிருக்கிறார் என்றுதான் நான் நினைத்தேன். அந்த அளவுக்குதான் Omicron கொரோனா வைரஸின் அறிகுறிகள் உள்ளன.
Omicron கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தசை வலி, உடல் வலி, தலைவலி மற்றும் சிறிய அளவில் தலைசுற்றல் ஆகிய அறிகுறிகள் உள்ளன. அதற்குப் பிறகு அந்த அறிகுறிகள் அதிகமாவதில்லை. சுமார் 5 நாட்களுக்குப் பிறகு, அவர்கள் குணமடைந்துவிடுகிறார்கள், அவ்வளவுதான் என்கிறார் மருத்துவர் Angelique.
தென்னாப்பிரிக்காவில் நான் பணியாற்றும் இடத்தில் Omicron கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் அதிகம் இல்லை. பலர் வீடுகளிலிருந்தவண்ணமே சிகிச்சை எடுத்துக்கொண்டார்கள். அதுவும், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் தடுப்பூசி பெறாதவர்கள்தான்.
தென்னாப்பிரிக்காவில் சுமார் 26 சதவிகிதத்தினர் மட்டுமே கொரோனா தடுப்பூசி பெற்றுள்ளர்கள். ஆனால், பிரித்தானியாவிலோ ஏராளமானோர் தடுப்பூசி பெற்றாயிற்று. அவர்களுக்கு பாதுகாப்பு அதிகம் உள்ளது.
பிரித்தானியாவில் ஒருவர் Omicron கொரோனா வைரஸால் உயிரிழந்தது உண்மைதான், ஆனால், மேலும் அதிக உயிரிழப்புகள் இருக்குமா? தென்னாப்பிரிக்க அனுபவத்தை வைத்துப் பார்த்தால், எங்கள் அனுபவத்தின்படி அதிக உயிரிழப்புகள் இருக்காது என்கிறார் மருத்துவர் Angelique.
இப்போது இந்த Omicron கொரோனா வைரஸுக்காக பொதுமுடக்கம் போன்ற கட்டுப்பாடுகளை விதித்தால், அது மக்களுக்கு மந்தை நோயெதிர்ப்பு சக்தி உருவாகுவதை, அதாவது அந்த வைரஸை எதிர்கொண்டு, அதனால் உடலில் ஆன்டிபாடிகள் உருவாகுவதை தாமதப்படுத்தும்.
அதனால், அடுத்தபடியாக ஒரு தீவிரமான வைரஸ் பரவ நேரிட்டால், அதை எதிர்க்க நமக்கு இயற்கை நோயெதிர்ப்பு சக்தி இருக்காது. அதுபோக இந்த கட்டுப்பாடுகளால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு மக்களின் நிதி நிலைமையும் பாதிக்கப்படும்.
ஆக, போரிஸ் ஜான்சனுக்கும் அவரது அமைச்சர்களுக்கும் என்னுடைய செய்தி என்னவென்றால், அமைதியாக இருங்கள், மக்களை திகிலடைய வைக்காதீர்கள், அது குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும்.
Omicron கொரோனா வைரஸுக்காக over-react செய்வதால், நமக்கு நன்மை செய்யும் ஒரு மரபணு மாற்றம் பெற்ற வைரஸால் ஏற்படும் நன்மைகளை இழக்கும் ஒரு அபாயம் ஏற்படலாம் என்கிறார் மருத்துவர் Angelique.