கொரோனா பரிசோதனைக்காக நோயாளிகளை பொய் சொல்லவைக்கும் மருத்துவர்கள்: பின்னணியை விளக்கும் முக்கிய செய்தி
தங்களிடம் வரும் நோயாளிகளை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக, வேறு வழியில்லாமல் அவர்களை பொய் சொல்ல வைப்பதாக மருத்துவர் ஒருவர் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய தேசிய மருத்துவ சேவை அமைப்பு (NHS), சில அறிகுறிகளைத்தான் கொரோனா அறிகுறிகளாக ஒப்புக்கொண்டுள்ளது.
அதாவது, காய்ச்சல், இருமல் மற்றும் வாசனை மற்றும் சுவை அறியும் திறன் இழப்பு என்னும் அறிகுறிகள் உள்ளவர்களை மட்டுமே கொரோனா பரிசோதனைக்கு பரிந்துரைக்கிறது என்.ஹெச்.எஸ்.
ஆனால், கொரோனாவானது நாளுக்கொரு அறிகுறியை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் கொரோனா நோயாளிகள் நாவு மற்றும் வாயில் ஏற்படும் புண்கள் ஆகிய புதியதொரு அறிகுறியை காட்டுவது தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், குடும்ப நல மருத்துவரான Dr Alex Sohal என்பவர், தன்னிடம் வரும் நோயாளிகளில் மூக்கில் நீர் வடிதல், தொண்டை அழற்சி, தொண்டை கரகரப்பு, உடல் வலி, சோர்வு மற்றும் தலைவலியுடன் வரும் நோயாளிகளுக்கு கூட கொரோனா இருப்பதை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த அறிகுறிகள் உள்ளவர்களுக்கு என்.ஹெச்.எஸ் கொரோனா பரிசோதனை செய்யாது என்பதால், வேறு வழியில்லாமல் தங்கள் நோயாளிகளிடம், தங்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் வாசனை மற்றும் சுவை அறியும் திறன் இழப்பு என்னும் அறிகுறிகள் இருப்பதாக பொய் சொல்லச்சொல்வதாக தெரிவிக்கிறார் அவர்.
எனவே, பிரித்தானியா கொரோனா அறிகுறிகள் என முடிவு செய்துவைத்திருக்கும் அறிகுறிகள் பட்டியலை மாற்றவேண்டியது அவசியம் என்கிறார் அவர்.
இப்படிப்பட்ட அறிகுறிகள் உள்ளவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யத் துவங்கினால் மட்டுமே, இந்த காலவரையறையற்ற பொதுமுடக்கத்திலிருந்து நாம் வெளியேற முடியும், இல்லையென்றால் உலகம் முழுவதும் மேலும் கொரோனா பரவத்தான் செய்யும் என்கிறார் அவர்.
ஆகவே, Dr Alex Sohal தலைமையிலான 140 மருத்துவர்கள் குழு ஒன்று சுகாதாரத்துறைக்கு, புதிய அறிகுறிகளையும் கொரோனா அறிகுறிகள் பட்டியலில் இணைப்பது தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

