பிரித்தானியாவில் NHS கொரோனா செயலிகளை நீக்கும் மருத்துவர்கள்: வெளியான காரணம்
பிரித்தானியாவில் தனிமைப்படுத்தல் தொடர்பில் NHS கொரோனா செயலிகளில் இருந்து தொடர்ந்து எச்சரிக்கை வருவதால், மருத்துவர்களும் செவிலியர்களும் தற்போது அந்த செயலியை தங்கள் மொபைலில் இருந்து நீக்கி வருகின்றனர்.
முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும், தனிமைப்படுத்த கொரோனா செயலியிலில் இருந்து தொடர்ந்து எச்சரிக்கை வருவது கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்த கட்டாய தனிமைப்படுத்தலில் இருந்து சுகாதார பணியாளர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பரவலாக எழுந்தது.
தற்போது, ஜூலை 19 முதல் அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள், NHS கொரோனா செயலி விடுக்கும் எச்சரிக்கையை அடுத்து தனிமைப்படுத்திக் கொள்வதால் பணிக்கு ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.
மட்டுமின்றி, பணியில் இருக்கும் போது, சுகாதார ஊழியர்கள் தங்கள் மொபைல் கொரோனா செயலியில் குறிப்பிட்ட அம்சத்தை முடக்கி வைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதனிடயே, பல ஊழியர்கள் அந்த செயலியை மொபைலில் இருந்து நீக்குவதுடன், சிலர் முழு நேரமும் அந்த செயலியை இயக்காமலும் இருப்பதாக NHS நிர்வாகிகள் தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டது.
இருப்பினும், கொரோனா செயலியால் தனிமைப்படுத்தல் எச்சரிக்கை விடுக்கப்படும் எண்ணிக்கை ஒரே வாரத்தில் 62% அதிகரித்தது. ஜூன் 30ம் திகதி வரையான ஒரு வாரத்தில் மட்டும் கொரோனா செயலியில் இருந்து சுமார் 356,036 பேர்களுக்கு சுயதனிமைப்படுத்தல் எச்சரிக்கை சென்றுள்ளது.
சுகாதார ஊழியர்கள் மட்டுமின்றி, மதுபான விடுதிகள் உணவகங்கள் உள்ளிட்டவைகளும் இதே பிரச்சனையை எதிகொள்கின்றனர் என்றே தெரிய வந்துள்ளது.