மகனுக்கு பதிலாக தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மணீஷ் என்ற நபருக்கு, சமீபத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக, காலில் காயம் ஏற்பட்டது.
காலில் அறுவை சிகிச்சை
இதனையடுத்து, கோட்டா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், இடது காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென கூறி, சனிக்கிழமை அறுவை சிகிச்சைக்கு வருமாறு தெரிவித்துள்ளனர்.
உதவிக்கு யாரும் இல்லாத நிலையில், முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட தனது தந்தை ஜெகதீஷை, மணீஷ் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.
மணீஷ் அறுவை சிகிச்சைக்காக, அறுவை சிகிச்சை செய்யும் அறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரது தந்தை அறுவை சிகிச்சை செய்யும் அறைக்கு வெளியே காத்திருந்தார்.
அன்றைய தினத்தில், ஜெகதீஷ் என்ற பெயரில் மற்றொரு நோயாளிக்கு, கையில் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக அங்கிருந்த மருத்துவ பணியாளர்கள் ஜெகதீஷ் என்ற பெயரை கூறி அழைத்துள்ளனர்.
அறுவை சிகிச்சை அறைக்கு வெளியே காத்திருந்த மணீஷின் தந்தை ஜெகதீஷ் தன்னை தான் அழைக்கிறார்கள் என நினைத்து கையை உயர்த்தியுள்ளார்.
தந்தைக்கு அறுவை சிகிச்சை
இதனையடுத்து, எந்த வித விசாரணையுமின்றி, அவரை அறுவை சிகிச்சைக்காக அழைத்து சென்ற மருத்துவர்கள், அவரது கையை கிழித்து அறுவை சிகிச்சை செய்ய தொடங்கியுள்ளார்கள்.
ஒரு கட்டத்தில், ஏதோ தவறு நடப்பதாக சுதாரித்த மருத்துவர்கள், ஜெகதீஷின் கையில் 6 தையல் போட்டு அவரை வெளியே அனுப்பியுள்ளார்கள்.
காலில் அறுவை சிகிச்சை முடிந்து வெளியே வந்து பார்த்த மணீஷ், தனது தந்தையின் கையில் தையல் போடப்பட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு விசாரித்து, 48 மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் சங்கீதா சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |