அவரை மட்டும் பிரதமராக விடாதீர்கள்... போரிஸ் ஜான்சனின் இரகசிய பழிவாங்கும் படலம் துவங்கியது
யாரை வேண்டுமானாலும் பிரதமர் ஆக்குங்கள், ஆனால், ரிஷி சுனக்கை மட்டும் பிரதமராக விடாதீர்கள் என்று போரிஸ் ஜான்சன் கூறியுள்ளதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காரணம், ரிஷி சுனக்கின் ராஜினாமாவைத் தொடந்துதான் பல பிரித்தானிய அமைச்சர்கள் ராஜினாமா செய்தார்கள். அதனால்தான் போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியை இழக்கும் ஒரு நிலை உருவாகியது என பரவலான ஒரு கருத்து நிலவுகிறது.
ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், தான் பிரதமர் பதவியை இழப்பதற்கு ரிஷி சுனக்தான் காரணம் என்பதால், தனக்கு துரோகம் செய்த ரிஷியை பிரதமராக விடக்கூடாது என்பதற்காக, போரிஸ் ஜான்சனும் அவரது குழுவினரும், இரகசிய பிரச்சாரம் ஒன்றை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
credit - timesofindia
பிரதமர் இல்லத்தின் மொத்த குழுவும் ரிஷியை வெறுக்கிறார்கள். இது தனிப்பட்ட ஒரு விடயம். போரிஸ் ஜான்சன் பதவியை இழப்பதற்கு சாஜித் ஜாவித் காரணம் அல்ல, ரிஷிதான் காரணம் என்று குற்றம் சாட்டும் அவர்கள், ரிஷி போரிஸ் ஜான்சனை பதவியிலிருந்து இறக்க பல மாதங்களாக திட்டமிட்டு வந்ததாக கருதுகிறார்கள் என்கிறது அந்த செய்தி.
ரிஷி சுனக் பிரதமராகக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் போரிஸ் ஜான்சன், பிரித்தானிய வெளியுறவுச் செயலரான Liz Truss மற்றும் ஜூனியர் வர்த்தக அமைச்சரான Penny Mordaunt ஆகியோர் தனக்கு பதிலாக பிரதமராவதில் ஆர்வம் காட்டி வருவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.