பிரச்சினையை உருவாக்க சாக்குப்போக்கு தேடாதீர்கள்... சீனாவுக்கு கனடா அறிவுறுத்தல்
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றொரு நாட்டுக்குச் சென்றதை எல்லாம் பிரச்சினை ஆக்காதீர்கள், பிரச்சினையை உருவாக்குவதற்கு சாக்குபோக்கு தேடாதீர்கள் என கனடா தரப்பிலிருந்து சீனாவுக்கு ஒரு செய்தி சொல்லப்பட்டுள்ளது.
அமெரிக்க சபாநாயகரான நான்சி பெலோசி சமீபத்தில் தைவானுக்குச் சென்று திரும்பினார். ஆனால், தைவான் தனக்குச் சொந்தமானது என்று கூறிவரும் சீனாவுக்கு, அமெரிக்க சபாநாயகர் அந்நாட்டுக்குச் சென்ற விடயம் எரிச்சலை மூட்ட, தைவானைச் சுற்றி போர் ஒத்திகைகளைத் துவக்கியுள்ளது சீனா. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால், நட்பு ரீதியாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றொரு நாட்டுக்குச் சென்றதை எல்லாம் பிரச்சினை ஆக்கக்கூடாது, பிரச்சினை உருவாக்குவதற்கென்றே சாக்குப்போக்குகளைத் தேடக்கூடாது என சீனாவைக் கண்டித்துள்ள கனடாவின் வெளியுறவு அமைச்சரான Melanie Joly, அப்பகுதியில் உருவாகியுள்ள பதற்றம் கவலையை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சீனாவின் அச்சுறுத்தும் வகையிலான நடவடிகைகள் அந்த பகுதியை நிலைகுலையச் செய்யும் அபாயத்தை அதிகரிப்பதாக தெரிவித்துள்ள அவர், பதற்றத்தைக் குறைக்குமாறு சீனாவை அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், உக்ரைனை தண்டிக்கும் வகையில் உணவு தானிய விநியோகத்துக்கு ரஷ்யா இடைஞ்சலை உருவாக்கியதுபோல, சீனா நேற்று முதல் தைவானிலிருந்து ஆரஞ்சு வகைப் பழங்கள் மற்றும் மீன் போன்ற சில பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.