விஜயகாந்த் மீது என்ன வன்மம்... வதந்திகளை பரப்பாதீங்க: கண்ணீருடன் பேசிய பிரேமலதா
விஜயகாந்தின் உடல்நிலை குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று அவரது மனைவி பிரேமலதா கண்ணீருடன் பேசியுள்ளார்.
விஜயகாந்த் உடல்நிலை
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இருமல், சளி மற்றும் தொண்டை வலியால் கடந்த 18 -ம் திகதி சென்னை மனப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என்று குறிப்பிட்டிருந்தது.
இதனையடுத்து, சமூக வலைத்தளங்களிலும், இணையதளங்களிலும் விஜயகாந்த் குறித்து வெளிவரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜயகாந்துடன் இருக்கும் புகைப்படத்தை பிரேமலதா வெளியிட்டார்.
பிரேமலதா பேசியது...,
இந்நிலையில், சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று நலத்திட்ட உதவிகளை பிரேமலதா வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "விஜயாகாந்துடன் நீங்கள் யாரும் இல்லை. நான் தான் அவருடன் இருக்கிறேன். அவரை பற்றி நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். அவரின் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்பாதீர்கள்.
எங்கள் தலைமை கழகத்தைத் தொடர்பு கொண்டாலே, விஜயகாந்தின் உடல்நிலை குறித்து உங்களுக்கு தெரிவிக்கப்படும். விஜயகாந்த் மீது அப்படி என்ன வன்மம் என்று தெரியவில்லை. அவர் நலமுடன் இருக்கிறார் என்று சொன்ன பின்னரும், சிலர் திட்டமிட்டு வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள்.
திருமணமே ஆகாத எங்களது இரு மகன்களுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று கூறுகிறார்கள். தயவு செய்து விஜயகாந்த் குறித்து தவறான தகவல்களை பரப்பாதீர்கள். அவர், இரண்டு, மூன்று நாள்களில் வீடு திரும்புவார்" என கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |