18 பந்துகளில் முதல் அரைசதம் அடித்த வீரர்: 13.1 ஓவர்களில் 188 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி
England beat australia by 8 wickets: அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில், இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
குயின்ஸ்லாந்தில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில், இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தரமான பதிலடி கொடுத்தது.
க்ரோகோம்ப், சாம் கர்ரன் அபாரம்
அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் நடந்தது.
முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ஓட்டங்கள் குவித்தது. நிகில் சௌத்ரி 45 (35) ஓட்டங்களும், ஜோயல் டேவிஸ் 39 (25) ஓட்டங்களும் விளாசினர். ஹென்றி க்ரோகோம்ப், சாம் கர்ரன் தலா 2 விக்கெட்டுகளும், ஜேமி ஓவர்டன் மற்றும் அடில் ரஷீத் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியில் அனெயுரின் டொனால்ட் (Aneurin Donald) 18 பந்துகளில் முதல் அரைசதம் அடித்தார். மறுமுனையில் பிலிப் சால்ட் அதிரடியில் மிரட்ட, இந்தக் கூட்டணி 61 பந்துகளில் 151 ஓட்டங்கள் குவித்தது.
32 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 85 ஓட்டங்கள் விளாசிய நிலையில் அனெயுரின் டொனால்ட் ஆட்டமிழந்தார்.

டொனால்ட், சால்ட் அதிரடி
பின்னர் அரைசதம் அடித்த பிலிப் சால்ட் (Philip Salt) 30 பந்துகளில் 58 ஓட்டங்கள் (4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்) விளாசி டுவார்ஷுஸ் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்து களமிறங்கிய டாம் பாண்டன் 8 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 26 ஓட்டங்கள் விளாச இங்கிலாந்து அணி 13.1 ஓவர்களில் 188 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு இங்கிலாந்து அணி பதிலடி கொடுத்தது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி 27ஆம் திகதி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற உள்ளது.
