அரசியலமைப்பு திருத்தம்- மூன்றாவது முறையும் ஆட்சி: டொனால்டு ட்ரம்ப் சூசகம்
அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் தெரிவாகியுள்ள டொனால்டு ட்ரம்ப், அரசியலமைப்பை திருத்தி மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்வதை பரிசீலிக்க இருப்பதாக சூசகமாக தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஒருமுறை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டவர். இந்த நிலையில், தமது ஆதரவாளர்கள் விரும்பினால் மீண்டும் ஒருமுறை தேர்தலை சந்திக்க தாம் தயார் என தெரிவித்துள்ளார்.
டொனால்டு ட்ரம்பின் இந்த கருத்து தற்போது அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. உண்மையில் டொனால்டு ட்ரம்பால் அரசியலமைப்பை திருத்த முடியாது என்றாலும், அவரது அடாவடியான செயல்பாடுகள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்றே அஞ்சப்படுகிறது.
பொதுவாகவே, அமெரிக்க ஜனாதிபதியாக ஒருவர் மூன்றாவது முறையாக மீண்டும் தேர்தலில் நிற்பதைக் கட்டுப்படுத்தும் விதிகள் அமெரிக்க அரசியலமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்க அரசியலமைப்பின் 22வது திருத்தம் எந்தவொரு ஜனாதிபதியும் மூன்றாவது முறையாக போட்டியிடுவதை தடுக்கிறது. டொனால்ட் ட்ரம்ப் மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக விரும்பினால், முதலில் அவர் அந்த திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்வது கடினமான பணியாகும், இதற்கு காங்கிரஸ் மற்றும் மாகாண சட்டமன்றங்களில் இருந்து அதிக அளவிலான ஆதரவை ஜனாதிபதி பெற வேண்டும். டொனால்டு ட்ரம்பால் இப்படியான ஒரு ஆதரவை திரட்டமுடியாத ஒன்று.
நான்கு முறை ஜனாதிபதியாக
1951 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க ஜனாதிபதிகளை அதிகபட்சமாக இரண்டு பதவிக் காலத்திற்குக் கட்டுப்படுத்தும் விதி முதலில் அமுலுக்கு வந்தது. குடியரசுக் கட்சியினரும், ஜனநாயகக் கட்சியினரும் அத்தகைய ஒரு ஏற்பாடு இருக்க வேண்டும் என்று கோரினர்.
இதற்குக் காரணம், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட், முன்னெப்போதும் இல்லாத வகையில் நான்கு முறை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். ஜனாதிபதியாக இருக்கும் போதே 1945ல் அவர் மரணமடைந்தார்.
அமெரிக்க அரசியல் வரலாற்றில் ரூஸ்வெல்ட் மட்டுமே இரண்டு முறைக்கு மேல் ஜனாதிபதியாக இருந்துள்ளார். மட்டுமின்றி, அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியும் நிறுவனருமான ஜார்ஜ் வாஷிங்டன் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே பதவி வகித்துள்ளார்.
மேலும், பிரதிநிதிகள் சபையில் 435 உறுப்பினர்கள் உள்ளனர், அவர்களில் 290 பேர் அத்தகைய ரத்துக்கு ஆதரவளிக்க வேண்டும். அதேபோல், 100 உறுப்பினர்களைக் கொண்ட செனட்டில், 67 பேர்கள் அதை ஏற்க வேண்டும்.
பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் மூலம் ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டால், அது ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒப்புதல் கோரி அனுப்பப்படும். மட்டுமின்றி, மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 38 மாகாணங்கள் இதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |