பனாமா கால்வாயை கைப்பற்றுவோம்: டொனால்டு ட்ரம்ப் புதிய மிரட்டல்
அமெரிக்க கப்பல்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக கொந்தளித்துள்ள டொனால்டு ட்ரம்ப், ஆட்சிக்கு வந்ததும் பனாமா கால்வாயை கைப்பற்றுவோம் என மிரட்டல் விடுத்துள்ளார்.
கவலையளிக்கும் போக்கு
பனாமா கால்வாய் நிர்வாகத்தில் சீனாவின் ஆதிக்கம் இருப்பதாகவும் மறைமுகமாக குறிப்பிட்டுள்ள டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க வணிகங்கள் அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களுக்கு இடையே சரக்குகளை நகர்த்துவதற்கு பனாமா கால்வாயை சார்ந்திருப்பதால்,
அமெரிக்க நலன்களுக்கு இது கவலையளிக்கும் போக்கு என்றும் குறிப்பிட்டுள்ளார். எங்கள் கடற்படை மற்றும் வர்த்தக கப்பல்கள் மிகவும் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டுள்ளன. பனாமா நிர்வாகத்தால் வசூலிக்கப்படும் கட்டணம் நியாயமற்றது என்றும் டொனால்டு ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நமது தேசத்தின் மீதான இந்த முழுமையான அபகரிப்பு உடனடியாக நிறுத்தப்ப வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 1914 ஆம் ஆண்டு அமெரிக்காவால் கட்டி முடிக்கப்பட்ட பனாமா கால்வாய்,
1977 ஆம் ஆண்டு ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் மத்திய அமெரிக்க நாடான பனாமாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் 1999ல் இருந்து தான் கால்வாய் மீதான முழு கட்டுப்பாட்டையும் பனாமா சொந்தமாக்கியது.
டொனால்டு ட்ரம்ப் மேலும் குறிப்பிடுகையில், பனாமா கால்வாயை பனாமா மட்டுமே நிர்வகிக்க வேண்டும், சீனா அல்லது வேறு எவருக்கும் அந்த உரிமை இல்லை என்றார். அத்துடன், பனாமா கால்வாயை தவறான கைகளில் ஒப்படைக்க அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்றார்.
எங்களிடம் ஒப்படைக்க
மேலும், பாதுகாப்பான, திறமையான மற்றும் நம்பகமான செயல்பாட்டை கால்வாயில் பனாமா நிர்வாகத்தால் உறுதி செய்ய முடியாவிட்டால், பனாமா கால்வாயை எந்த கேள்வியும் இன்றி முழுமையாக எங்களிடம் ஒப்படைக்கக் கோருவோம் என்றார்.
உலகளாவிய கடல் போக்குவரத்தில் ஐந்து சதவீதம் பனாமா கால்வாய் வழியாக செல்கிறது. இது ஆசியா மற்றும் அமெரிக்க கிழக்கு கடற்கரைக்கு இடையே பயணிக்கும் கப்பல்கள் தென் அமெரிக்காவின் தெற்கு முனையைச் சுற்றியுள்ள நீண்ட, அபாயகரமான பாதையைத் தவிர்க்க அனுமதிக்கிறது.
மேலும், அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா வணிக நிறுவனங்களே கால்வாயின் முக்கிய பயனர்களாக உள்ளனர். பொதுவாகவே தொழிலதிபரான ட்ரம்ப் எப்போதும் அமெரிக்க தொழில்துறை சார்ந்த முடிவுகளையே ஆதரிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |