மனைவியால் போதுமான துன்பம் அனுபவிக்கிறார்... அதை செய்வதில்லை: ஹரி தொடர்பில் மனம் மாறிய ட்ரம்ப்
இளவரசர் ஹரியின் குடியேற்ற நிலை தொடர்பான சட்டப் போராட்டத்திற்கு மத்தியில், அவரை நாடு கடத்தப் போவதில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடும் விமர்சனம்
ஆனால் ஹரியின் காதல் மனைவி மேகன் மெர்க்கல் குறித்து கடும் விமர்சனம் ஒன்றை டொனால்டு ட்ரம்ப் முன்வைத்துள்ளார். இளவரசர் ஹரி விவகாரத்தில் பதிலளித்துள்ள ஜனாதிபதி ட்ரம்ப்,
நான் அப்படி செய்ய விரும்பவில்லை. நான் அவரை தனியாக விட்டுவிடுகிறேன். அவருக்கு அவர் மனைவியுடன் போதுமான பிரச்சினைகள் உள்ளன. அவர் பயங்கரமானவர் என்பது அறிந்ததே என்றார்.
தாம் போதைப்பொருள் எடுத்துக்கொண்டதை தமது Spare நூலில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டதை அடுத்தே விசா தொடர்பான சிக்கல் இளவரசர் ஹரிக்கு ஏற்பட்டது.
இந்த விவகாரத்தை தீவிர வலதுசாரி அமைப்பான Heritage அறக்கட்டளை பூதாகரமாக மாற்றியதுடன், விசா விண்ணப்பத்தின் போது இளவரசர் ஹரி பொய் சொன்னதாகவும் குற்றஞ்சாட்டியது. அல்லது ஜனாதிபதி பைடனால் சிறப்பு கவனிப்பு அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
ஆனால் இந்த விவகாரம் தொடர்பான சட்டப்போராட்டத்தில் இளவரசர் ஹரி நேரிடையாக தொடர்பு கொள்ளவில்லை. மாறாக விசா விண்ணப்பங்களை நிர்வகிக்கும் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கும் ஹெரிடேஜ் அறக்கட்டளைக்கும் இடையே இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.
ஹரியை நாடு கடத்தும்
விசா விண்ணப்பதாரர்கள் போதைப்பொருள் குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்திருந்தால் அவர்களை தகுதியற்றவர்களாக மாற்றும் என்று அமெரிக்க வெளிவிவகார விதிகள் கூறுகின்றன. இருப்பினும் இந்த விவகாரத்தில் சில சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களை பொதுவெளியில் வெளியிடயிருப்பதாக இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி குறிப்பிடவும், அது இளவரசர் ஹரியை நாடு கடத்தும் நிலைக்கு தள்ளும் என்றே கூறப்பட்டது.
தற்போது இந்த விவகாரம் தொடர்பில் ட்ரம்ப் விளக்கமளித்திருந்தாலும், ஹெரிடேஜ் அறக்கட்டளை தொடுத்த வழக்கு விசாரணையின் முடிவைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |