ரஹ்மானை தாக்கி பதிவிடவேண்டாம்! மன்னிப்பு கேட்ட இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்
இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானை தாக்கி பேச வேண்டாம், நிகழ்ச்சி குளறுபடிகளுக்கு நாங்களே பொறுப்பேற்று கொள்கிறோம் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் விளக்கம் கொடுத்துள்ளார்.
இசை நிகழ்ச்சி
கடந்த ஞாயற்றுக்கிழமை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முறையற்ற ஏற்பாடுகள் காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
15 ஆயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்களை கூட உள்ளே அனுமதிக்காமல் கடுமையான இன்னல்களுக்கு உள்ளாகினர். மேலும் நிகழ்ச்சி அரங்கில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இருந்தனர்.
ஆனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 20 ஆயிரம் மக்கள் கூடுவதற்குத்தான் காவல்துறையிடம் அனுமதி வாங்கியுள்ளனர்.
முன்பு ரத்தான நிகழ்ச்சிக்கு டிக்கெட் கேன்சல் செய்தவர்கள், போலி டிக்கெட் வாங்கியவர்கள் என அதிக கூட்டம் வந்ததால் சமாளிக்க முடியாமல் போனது என நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்த ஏசிடிசி நிறுவனம் கூறியது.
நிகழ்ச்சி குளறுபடிகளால் கோபமடைந்த ரசிகர்கள் பலரும் இசையமைப்பாளர் ரஹ்மானை கடுமையாகத் தாக்கி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
மன்னிப்பு கேட்ட ஏசிடிசி நிறுவனர்
இந்நிலையில் ஏசிடிசி நிறுவனர் ஹேமந்த் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் நிகழ்ச்சி குளறுபடிகளுக்கு விளக்கம் சொல்லியும் மன்னிப்பு கோரியும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், “ ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கும் ரஹ்மானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதற்கு முழுக்க முழுக்க நாங்களே பொறுப்பேற்றுக் கொள்கிறோம்.
இசை நிகழ்ச்சியை நடத்திக் கொடுப்பது மட்டுமே அவரின் வேலை. அதை சிறப்பாக செய்தார். அதனால், அவரைத் தாக்கி பதிவிட வேண்டாம்.
டிக்கெட் வாங்கியும் நிகழ்ச்சியைக் காண முடியாத அனைவருக்கும் நிச்சயம் பணம் திருப்பி அளிக்கப்படும்” என ரசிகர்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |