கொரோனா தடுப்பூசி போடும் முன் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளவேண்டாம்... சுவிஸ் நிபுணர்கள் எச்சரிக்கை
கொரோனா தடுப்பூசி போடும் முன் பாராசிட்டமால் மாத்திரையை எடுத்துக்கொள்ளவேண்டாம் என சுவிஸ் நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.
சுவிட்சர்லாந்தில், கொரோனா தடுப்பூசி போடும் முன் பாராசிட்டமால் மாத்திரை போட்டுக்கொண்டால், பக்க விளைவுகளைத் தடுக்கலாம் என தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டதாக சிலர் தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், பாராசிட்டமால் மாத்திரை, ஆன்டிபாடிகள் உருவாக்கத்தை வலுவிழக்கச் செய்து, தடுப்பூசியின் செயல்திறனை சற்று குறைக்கமுடியும் என்பதற்கு சில ஆதாரங்கள் உள்ளன. என்றாலும், எதிர்மறையான பக்கவிளைவுகள் மிகக் குறைவே, தடுப்பூசி செயல்படத்தான் செய்யும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இருந்தாலும், ஜெனீவா மற்றும் Vaud மாகாண அதிகாரிகள், உங்களுக்கு அறிகுறிகள் இருந்தால் மட்டுமே வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும், அறிகுறிகள் வரும் என எதிர்பார்த்து முன்கூட்டியே பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் கூறியுள்ளார்கள்.
இந்நிலையில், சூரிச் மாகாணத்தில், வழக்கத்தைவிட 15 சதவிகிதம் அளவுக்கு அதிகமாக பாராசிட்டமால் மாத்திரைகள் விற்பனை ஆகியுள்ளதாக மருந்தக உரிமையாளர்கள் தெரிவிக்கிறார்கள். அதாவது, மக்கள் ஏற்கனவே பாராசிட்டமால் மாத்திரைகளை வாங்கி ஸ்டாக் செய்தாயிற்று என்பது அதன் பொருள்!