எங்களைச் சோதிக்க வேண்டாம்... ரஷ்யாவுக்கு பிரித்தானியா கடும் எச்சரிக்கை
மேற்கத்திய நாடுகளை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று பிரித்தானியப் பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் ரஷ்யாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், பொறுமை காக்கும் எங்களை வீணாக சோதிக்க வேண்டாம் என்றும் அவர் ரஷ்ய ஜனாதிபதி புடினை குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய நட்பு நாடுகள் விளாடிமிர் புடின் தொடர்பில் அச்சம் கொள்ள தேவை இல்லை என குறிப்பிட்டுள்ள பென் வாலஸ், இந்த இக்கட்டான சூழலில் உக்ரைனுக்கு அதிக உதவிகளை பிரித்தானியா முன்னெடுக்க வேண்டும் எனவும், ரஷ்யாவின் டாங்கிகள் மற்றும் விமானங்களை தகர்க்கும் ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
விளாடிமிர் புடின் தொடர்பில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ள பென் வாலஸ், பிரித்தானியாவை சீண்டும் வேலை வேண்டாம் எனவும், எங்களைச் சோதிக்க முற்பட வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புடின் எங்களை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றே இத்தருணத்தில் கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ள பென் வாலஸ், பரந்துபட்ட மேற்கு நாடுகளையும் பிரித்தானியாவையும் குறைத்து மதிப்பிடும் சர்வாதிகார தலைவர்களுக்கு என்ன ஆனது என்பது வரலாறு என குறிப்பிட்டுள்ள அவர் சர்வதேச சமூகத்தை புடின் தெளிவாகக் குறைத்து மதிப்பிட்டார் என தெரிவித்துள்ளார்.
மேலும், நாங்கள் ஒன்றுபட்டு, அச்சுறுத்தல்களை எதிர்கொண்டால், விளாடிமிர் புடின் வீழ்வது உறுதி என நான் நம்புகிறேன் என்றார் பென் வாலஸ்.
ரஷ்யாவின் படையெடுப்பால் உக்ரைனில் ஏற்பட்டுள்ள சேதம் என்பது பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் எனவும், அப்பாவி உக்ரைன் மக்கள் 1.5 மில்லியன் பேர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர் எனவும் பென் வாலஸ் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் விவகாரத்தில் கேள்வி எழுப்பிய துருக்கியிடம், ரஷ்யாவிடம் உக்ரைன் சரணடையும் வரையில் தாக்குதல் தொடரும் எனவும், எங்களின் திட்டத்தின் படியே இதுவரையான நகர்வுகள் முன்னோக்கி செல்கிறது எனவும் விளாடிமிர் புடின் பதிலளித்துள்ளார்.
இதனிடையே, உக்ரைன் விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரித்தானிய மூத்த தளபதி ஒருவர், இதுவரை வெளியான தகவலின் அடிப்படையில், ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளில் பிரித்தானிய துருப்புகளுக்கு ஏற்பட்ட இழப்பை விடவும் பலமடங்கு இழப்புகளை ஒரே வாரத்தில் உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இதனால் விளாடிமிர் புடின் பின்வாங்கிவிடுவார் என கருத முடியாது எனவும், இன்னும் மிக மோசமான தாக்குதலை அவர் உக்ரைனில் நிகழ்த்தக் கூடும் எனவும் பிரித்தானிய தளபதி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.