இது வெறும் ஆரம்பம் மட்டுமே... டோவரில் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான குழு எச்சரிக்கை
Dover anti-migrant mob warn it's only the beginning: டோவரில் புலம்பெயர் மக்களுக்கு எதிரான குழு ஒன்று, இது வெறும் ஆரம்பம் மட்டுமே என்று எச்சரித்துள்ளது.
நேற்று டோவர் துறைமுகத்திற்குள் அத்துமீறி நுழைந்த, முகமூடி அணிந்த குழுவை அரசியல்வாதிகள் கண்டித்துள்ள நிலையில், இது வெறும் ஆரம்பம் தான் என்று போராட்டக்காரர்கள் எச்சரிக்கும் தொனியில் கூறியுள்ளனர்.

கருப்பு உடை அணிந்த நூற்றுக்கணக்கானவர்கள் பிரித்தானியாவின் மிகவும் பரபரப்பான படகு முனையத்தை மறித்ததால், அதைச் சுற்றியுள்ள சாலைகளில் பல மணிநேரப் போக்குவரத்து முடக்கமும் மைல்கணக்கிலான வாகன வரிசைகளும் ஏற்பட்டன.
இணையத்தில் வெளியான காணொளிகள், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு வேனின் பின்பகுதியிலிருந்து வெளியேறி, பின்னர் நகருக்குள் அணிவகுத்துச் சென்றதைக் காட்டின.
மட்டுமின்றி, அவர்கள் படகுப் போக்குவரத்தை நிறுத்துங்கள் போன்ற முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர். இந்த நிலையில், அந்தப் குழுவைக் கண்டித்த அரசியல்வாதிகளில் Reform UK கட்சியைச் சேர்ந்த ராபர்ட் ஜென்ரிக் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ஜொனாதன் ரெனால்ட்ஸ் ஆகியோரும் அடங்குவர்.
ஆனால், அந்தக் குழுவின் மீது காவல்துறை மெதுவாக நடவடிக்கை எடுத்ததை டோவர் மாவட்ட மன்றத் தலைவர் கெவின் மில்ஸ் விமர்சித்துள்ளார்.

புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் செல்லும் சிறிய படகுகள் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதால் ஏற்படும் அதிருப்தியைப் புரிந்துகொள்வதாக ஜென்ரிக் கூறினார், ஆனால் முகமூடி அணிந்து மக்கள் போராட்டத்தில் குதிப்பதை தாம் விரும்பவில்லை என்றார்.
இந்த நிலையில், இந்த முகமூடி அணிந்த குழுவைக் களமிறக்கியது Patriot Platform என்ற அமைப்பு என்றே தெரிய வருகிறது. இந்த அமைப்பானது ஆண்டின் தொடக்கத்தில், தீவிர வலதுசாரிச் சிந்தனை கொண்ட சமூக ஊடகப் பிரபலமும் டேனியல் தாமஸ் என்ற இயற்பெயரைக் கொண்டவருமான டேனி டோமோவால் நிறுவப்பட்டது.

இவ்வமைப்பின் நோக்கம் இந்நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதே என்று அவர் முன்னரே அறிவித்துள்ளார். ஏப்ரல் மாதத்தில், தீவிரமான அத்துமீறல் குற்றத்திற்காக தாமஸ் கைது செய்யப்பட்டதோடு, டோவர், ராம்ஸ்கேட் மற்றும் ஃபோல்க்ஸ்டோன் ஆகிய இடங்களுக்குச் செல்ல அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.
மேலும் கடந்த மாதம், சட்டப்பூர்வ அனுமதியின்றி டோவர் துறைமுகத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைந்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
நேற்றைய போராட்டத்தில் காவல்துறையினர் யாரையும் கைது செய்யவில்லை; மதிய வேளையில் போராட்டக்காரர்களை டோவர் பிரையரி ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். குறைந்தது 100 போராட்டக்காரர்கள் ராம்ஸ்கேட் செல்லும் ரயிலில் ஏறுவதும் தெரிய வந்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |