கொரோனா சிகிச்சை குறித்து விமர்சித்ததால் பிரச்சினைக்குள்ளான இந்திய பெண் மருத்துவர் விவகாரத்தில் முக்கிய திருப்பம்
கொரோனா சிகிச்சை குறித்து விமர்சனம் செய்த இந்திய பெண் மருத்துவர் ஒருவர் கனடாவில் கடும் விமர்சனத்துக்குள்ளானார்.
கனடாவின் ஒன்ராறியோவில் குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றுபவர் Dr. குல்விந்தர் கவுர் கில். கொரோனாவை எதிர்கொள்ள, கனேடியர்களுக்கு தடுப்பூசியோ, பொதுமுடக்கமோ தேவையில்லை என்றும், மலேரியா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஒரு மருந்தே போதுமானது என்றும் வெளிப்படையாக வாதிட்டிருந்தார் குல்விந்தர்.
ஆனால், அதற்கு அவரது சக மருத்துவர்களிடமிருந்தே பலத்த எதிர்ப்பு உருவானது. அவர் தெரிவித்த கருத்துக்களில் ஒன்று ட்விட்டரிலிருந்து அகற்றப்பட்டதுடன், குல்விந்தர் மீது ஒன்ராறியோ ஒழுங்கு முறை ஆணையத்திலும் புகாரளிக்கப்பட்டது.
ஆனால், அந்த பிரச்சினையில் இப்போது முக்கிய திருப்பம் ஒன்று உருவாகியுள்ளது.
ஆம், தனது நற்பெயருக்கு வேண்டுமென்றே களங்கம் ஏற்படுத்தியதாக, ஒன்ராறியோ மருத்துவ கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் ஒருவர் உட்பட, 23 பேர் மீது, 6.8 மில்லியன் டொலர்கள் இழப்பீடு கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார் குல்விந்தர்.
அவரது புகாரில், என் எதிர்க்கட்சிக்காரர்கள், கழுதைப்புலிகளின் கூட்டத்தைப்போல, எனது தொழிலையும் நற்பெயரையும் கெடுப்பதற்காக ஒன்றிணைந்துள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சீக்கிய பின்னணி கொண்ட பெண்ணான குல்விந்தரை கையாலாகாதவர் என்றும் திடமான மன நலம் இல்லாதவர் என்றும் உருவகப்படுத்தி, அவரது எதிர்காலத்தை அவர்கள் நாசமாக்கிவிடுவதாக அச்சுறுத்துவதாகவும் அவரது புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் மீது கூறப்பட்டுள்ள விமர்சனங்கள் பாலின மற்றும் இன ரீதியானவை என்றும் அவரது புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், குல்விந்தர் யாரிடமிருந்தும் இழப்பீடாக ஒரு நயா பைசா கூட வாங்கமாட்டார் என எதிரணியினர் விமர்சித்துள்ளார்கள்..