பிரித்தானியாவில் ஊரடங்கு கட்டாயமா? NHS தலைவர்கள் அளித்த நம்பிக்கையான தகவல்
பிரித்தானியாவில் ஓமிக்ரான் பரவல் தீவிரமாக இருந்தாலும், கடுமையான கட்டுப்பாடுகள் தேவையில்லை என்று NHS தலைவர்கள் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.
ஓமிக்ரான் தொற்றால் சில மூத்த குடிமகன்கள் தீவிரமாக பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அதற்காக மட்டும் பிரித்தானியாவில் கொரோனா கட்டுப்பாடுகளை அமுலுக்கு கொண்டுவரத் தேவையில்லை என NHS தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிரித்தானியாவில் ஓமிக்ரான் பரவல் காரணமாக நாடு முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுகிறது. 30ம் திகதி ஒரே நாளில் மட்டும் பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,492 என பதிவாகியுள்ளது.
இது பிப்ரவரி மாதத்தில் இருந்து பதிவான எண்ணிக்கையில் உச்சம் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் முதன்முதலாக அடையாளம் காணப்பட்ட டெல்டா மாறுபாட்டை ஒப்பிடுகையில், ஓமிக்ரான் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிப்போர்களின் எண்ணிக்கை 50 முதல் 70% வரையில் குறைந்தே காணப்படுகிறது.
மட்டுமின்றி, பிரித்தானிய மக்கள் தங்கள் பூஸ்டர் தடுப்பூசிகளை போட்டுக்கொண்டு தங்களையும் குடும்பத்தினரையும் சுற்றத்தாரையும் பாதுகாக்க வேண்டும் என NHS தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதனிடையே, கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி 332 பேர்கள் பிரித்தானியாவில் மரணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றால் இதுவரை மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 148,421 என பதிவாகியுள்ளது.
வயதானவர்களில் ஓமிக்ரான் தொற்று பரவி வரும் நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுகள் குறைந்து வருவதாக நேற்று வெளியான புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் 55 முதல் 75 வயதுடைய பிரித்தானிய மக்களில் தொற்று பரவல் நீடிப்பது கவலையளிக்கும் விடயமாக நிபுணர்களால் பார்க்கப்படுகிறது.