வரைவு வாக்காளர் பட்டியலில் பெயரை எப்படி தேடுவது ? பெயர் இல்லையென்றால் என்ன செய்வது?
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயரை எப்படிதேடுவது, பெயர் நீக்கப்பட்டால் எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
2026 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் பணியை(SIR) இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.

கடந்த நவம்பர் 4ஆம் திகதி தொடங்கிய வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி, டிசம்பர் 14ஆம் திகதி வரை நடைபெற்றது.
இந்நிலையில், இன்று தமிழ்நாட்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதில், இறந்த வாக்காளர்கள், முகவரியில் இல்லாதவர்கள், நிரந்தரமாக குடி பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவுகள், இதர காரணங்கள் எனக்கூறி தமிழ்நாடு முழுவதும் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக சென்னையில், 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பெயரை எப்படி சரிபார்ப்பது?
வாக்காளர்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என சரிபார்க்க, voters.eci.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று Search Your Name in Voter List என்பதை கிளிக் செய்து சரிபார்க்கலாம்.
அதில் மாநிலத்தை தேர்வு செய்து 3 வழிகளில் சரிபார்க்கலாம்.

1.) உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்(search by EPIC), உள்ளிட்டு Captcha Code நிரப்பி சரிபார்க்கலாம்.
2.) உங்கள் பெயர், உறவினர் பெயர், பிறந்த திகதி அல்லது வயது, பாலினம், மாவட்டம், சட்டமன்ற தொகுதி ஆகியவற்றை உள்ளிட்டு சரிபார்க்காலம்.
3.) உங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணை உள்ளிட்டு அதற்கு வரும் OTPயை உள்ளிட்டு சரிபார்க்காலம்.
நீக்கப்பட்டவர்களின் பெயர்களை https://erolls.tn.gov.in/asd/ இந்த இணையதளத்தில் காரணத்துடன் தெரிந்து கொள்ளலாம்.

எப்படி விண்ணப்பிப்பது?
உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லையென்றால், தங்கள் பெயரை சேர்க்க, படிவம் 6-ஐ பூர்த்தி இன்று முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

முகவரி மாற்றம் செய்ய அல்லது தொகுதி மாற்றம் செய்ய படிவம் 8 -ஐ சமர்ப்பிக்க வேண்டும்.
https://voters.eci.gov.in/ இணையதளம் மூலமாகவும், சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு சென்றும் இந்த படிவங்களை சமர்ப்பிக்க முடியும்.
விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, பிப்ரவரி 17 ஆம் திகதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |