பிரித்தானியாவில் மனைவியைக் கொன்றுவிட்டு நாடகமாடிய அகதி... நாடுகடத்தல் வழக்கில் அதிரடி திருப்பம்
பிரித்தானியாவில் வாழ்ந்த பங்களாதேஷைச் சேர்ந்த அகதி ஒருவர் தன் மனைவியைக் கொன்றுவிட்டு நாடகமாடிய வழக்கில், அவரை நாடுகடத்த முடியாது என நீதிபதி ஒருவர் தீர்ப்பளித்துள்ளார்.
பிரித்தானியாவில் வாழும் பங்களாதேஷைச் சேர்ந்த ஒரு அகதி, தன் மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக, 2008ஆம் ஆண்டு அவருக்கு குறைந்தபட்ச தண்டனையாக 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் விடுதலையானதும், அவரை நாடுகடத்த உள்துறை அலுவலகம் விரும்பியது. அதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த புலம்பெயர்தல் தீர்ப்பாயம் ஒன்றின் நீதிபதியான Hugo Norton-Taylor என்பவர், பெயர் வெளியிடப்படாமல் EH என்று மட்டும் அழைக்கப்படும் அந்த 40 வயது அகதி, தன் மனைவியைக் கொன்றுவிட்டு, பிரித்தானியாவில் தொடர்ந்து வாழும் நோக்கில், தான் இருபாலின ஈர்ப்புகொண்டவர் என நாடகமாடியது உண்மைதான் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஆனால், அவரை நாடுகடத்த முடியாது என்று அவர் கூறிவிட்டார்.
காரணம், பங்களாதேஷைச் சேர்ந்த அந்த நபர், தான் மதம் மாறிவிட்டதாகவும், அதனால் தான் பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டால் தன் நாட்டில் துன்புறுத்தப்படலாம் என்றும், அது தற்கொலைக்கு வழிவகுக்கக்கூடும் என்றும் தனது மேல் முறையீட்டு மனுவில் தெரிவித்திருந்தார்.
ஆகவே, அந்த நபரை பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்துவது, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் விதித்துள்ள விதிகளை, குறிப்பாக, சட்டப்பிரிவுக் கூறு 3ஐ மீறுவதாகவும் என்று கூறியுள்ள நீதிபதி, அவரது மேல் முறையீட்டில் அவர் வென்றுள்ளதாகவும், அவரை நாடுகடத்த இயலாது என்றும் தீர்ப்பளித்துள்ளார்.