இஸ்லாமிய குடும்பத்தினர் மீது வேண்டுமென்றே காரை மோதிக் கொன்ற நபர் இவர்தான்... புகைப்படம் வெளியானது
கனடாவில் நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த இஸ்லாமிய குடும்பத்தின்மீது வேண்டுமென்றே வேனை மோதிக் கொன்ற நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
கனடாவில், ஒன்ராறியோவிலுள்ள லண்டன் பகுதியில், Salman Afzaal (46), அவரது மனைவி Madiha Salman(44), தம்பதியரின் மகள் Yumna Salman (15), மகன் Fayez Afzal (9)மற்றும் Afzaalஇன் தாயார் ஆகியோர் நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, Nathaniel Veltman (20) என்ற நபர் வேண்டுமென்றே தனது வேனைக்கொண்டு அவர்கள் மீது மோதியிருக்கிறார்.
வேன் மோதியதில், Salman Afzaal, அவரது மனைவி Madiha Salman, மகள் Yumna Salman மற்றும் 74 வயதாகும் Afzaalஇன் தாய் ஆகியோர் கொல்லப்பட்டனர். தம்பதியரின் மகன் Fayez Afzal படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவரது உடல் நலம் முன்னேறி வருவதாக தெரியவந்துள்ளது.
இந்த கோரத் தாக்குதல் குறித்து கேள்விப்பட்ட தான் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ள கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, இது ஒரு தீவிரவாத தாக்குதல் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த தாக்குதலை நடத்திய Nathaniel Veltmanஇன் புகைப்படம் வெளியாகியுள்ளது. சம்பவம் நடந்தபின், பொலிசார் Nathanielஐ கைது செய்யும்போது அவர் சிரித்துக்கொண்டிருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த டாக்சி சாரதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், Nathanielஐ அறிந்தவர்கள், குறிப்பாக, அவருடன் முட்டை பேக் செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் நண்பர் ஒருவர், அவர் மிகவும் நல்ல குணம் கொண்டவர் என்றும், கேட்டால் சட்டையைக் கூட கழற்றிக் கொடுத்து விடுவார் என்றும், இஸ்லாமியரான தன்னிடம் இதுவரை எந்த வெறுப்பும் காட்டியதில்லை என்றும் கூறியுள்ளார். Nathaniel மீது நான்கு கொலைக்குற்றச்சாட்டுகள் மற்றும் ஒரு கொலை முயற்சிக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.