106 பயணிகளுடன்... நொடி நேரத்தில் தப்பிய விமானம்: விமானி சொன்ன பின்னணி
நியூ ஜெர்சியில் தரையிறங்கிக்கொண்டிருந்த யுனைடெட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று, ட்ரோன் ஒன்றுடன் மோதும் நிலைக்கு மிக அருகில் சென்றதாக அதன் விமானி தெரிவித்துள்ளார்.
100 அடி இடைவெளி
நாங்கள் கிட்டத்தட்ட ஒரு ட்ரோன் மீது மோதியிருப்போம் என்று விமானி கூறுவது விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுப் பிரிவுக்கான ஒலிப்பதிவில் பதிவாகியுள்ளது.

அந்த ட்ரோன் வட்ட வடிவமானதாகவும், ஏறக்குறைய மூன்று அடி அகலம் கொண்டதாகவும், விமானத்திற்குக் கீழே சுமார் 100 அடி இடைவெளியில் காணப்பட்டதாகவும் அந்த விமானி விவரித்துள்ளார்.
புளோரிடாவின் கீ வெஸ்டிலிருந்து 106 பயணிகள் மற்றும் 5 பணிக்குழுவினருடன் வந்த போயிங் 737 விமானம், மாலை சுமார் 5:30 மணியளவில் நெவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
கிட்டத்தட்ட ஒரே நேரத்தில்
ஆனால், நடந்த சம்பவம் தொடர்பில் தகவல் ஏதும் அறிந்திராதது போல பயணிகள் சர்வசாதாரணமாக வெளியேறியுள்ளனர். இதனிடையே, கோஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் யுனைடெட் எக்ஸ்பிரஸ் விமானத்தில் நெவார்க்கிற்குப் பயணித்த மற்றொரு விமானியும், சுமார் 2,000 அடி உயரத்தில் ஒரு ட்ரோனைக் கண்டதாகத் தெரிவித்தார்.

இந்த இரு சம்பவங்களும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நடந்துள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது. ஃபெடரல் ஏவியேஷன் அத்தாரிட்டியின் (Federal Aviation Authority) தகவலின்படி, அமெரிக்க விமான நிலையங்களுக்கு அருகே மாதந்தோறும் சுமார் 100 முறை ட்ரோன்கள் தென்படுகின்றன.
உத்தியோகப்பூர்வ அனுமதியின்றி, கட்டுப்படுத்தப்பட்ட வான்வெளிகளிலோ அல்லது மனிதர்கள் இயக்கும் விமானங்களுக்கு அருகிலோ ட்ரோன்களைப் பயன்படுத்துவது தடை செய்திருந்தாலும் இதே நிலை நீடிக்கிறது என்றே கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |