அந்த ஒற்றைப் புகைப்படம்: சொந்த பிள்ளைகள் ஐவரை கொடூரமாக கொன்ற ஜேர்மன் தாயார்
ஜேர்மனியில் தமது முன்னாள் கணவர் புதிதாக ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தைப் பார்க்க நேர்ந்த தாயார் ஒருவர் தமது பிள்ளைகள் ஐவரை கொன்று தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் தற்போது நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது.
தொடர்புடைய சம்பவம் கடந்த 2020 செப்டம்பர் மாதம் நடந்துள்ளது. தற்போது 28 வயதாகும் கிறிஸ்டியன் கே என்பவரே, தமது 6 பிள்ளைகளில் ஐவருக்கு போதை மருந்து அளித்து மூச்சைத்திணறடித்து கொன்றவர். பின்னர் அந்த ஐந்து சிறார்களின் சடலங்களையும் படுக்கையில் கிடத்தியுள்ளார்.
11 வயதான மூத்த மகன், அப்போது பள்ளிக்கு சென்றிருந்த நிலையிலும், தம்முடன் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள மறுத்ததாலும், குறித்த சிறுவனை பாட்டியின் குடியிருப்புக்கு அனுப்பி வைத்துள்ளார் அந்த தாயார்.
பின்னர் அவர் மட்டும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள முயல, பொதுமக்களால் காப்பாற்றப்பட்டு, பின்னர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், வியாழக்கிழமை அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கிறிஸ்டியன் தமது ஐந்து பிள்ளைகளை கொலை செய்வதற்கும் சில மாதங்கள் முன்னர், அவரது மூன்றாவது கணவர் பிரிந்து சென்றுள்ளார். இதனால் 6 பிள்ளைகளுடன் தனித்துவிடப்பட்டதாக உணர்ந்த கிறிஸ்டியன், செப்டம்பர் 3ம் திகதி பிரிந்து சென்ற தமது கணவன் இன்னொரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளதை பார்த்துள்ளார்.
அதுவே தமது பிள்ளைகளையும் கொலை செய்து தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு அவரை தள்ளியதாக நீதிமன்ற விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்பவத்தன்று கிறிஸ்டியனின் தாயார் பொலிசாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில், அவர்கள் கிறிஸ்டியன் தங்கியிருந்த குடியிருப்புக்கு சென்றுள்ளனர். ஆனால் பொலிசார் வந்து சேரும் முன்னர், கிறிஸ்டியன் தமது பிள்ளைகளை கொலை செய்துவிட்டு, தமது மகனுடன் தற்கொலை செய்து கொள்ளும் பொருட்டு Dusseldorf மத்திய இரயில் நிலையத்திற்கு புறப்பட்டிருந்தார்.
இரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றிருந்தாலும், காயங்களுடன் அவர் உயிர் தப்பினார். தற்போது கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளார்.