23 வயது யுவதியால் அனாதைகளாக்கப்பட்ட 3 பிஞ்சு குழந்தைகள்: நெஞ்சை உலுக்கும் சம்பவம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வாகன விபத்தை ஏற்படுத்தி மூன்று பிஞ்சு பிள்ளைகளை அனாதையாக்கிய யுவதிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது கடந்த 2020 டிசம்பர் மாதம் கலிபோர்னியாவின் நியூபோர்ட் கடற்கரை பகுதியில் நடந்துள்ளது. இந்த வழக்கில் விசாரணையை எதிர்கொண்ட 23 வயது கிரேஸ் கோல்மன் என்ற யுவதிக்கு நியூபோர்ட் கடற்கரை நீதிமன்றம் 21 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறை தண்டனை விதித்துள்ளது.
நீதிபதி தீர்ப்பை அறிவிக்கையில் கிரேஸ் கோல்மன் கண்களில் நீர்வழிய தலைகுனிந்து நின்றதாக கூறப்படுகிறது. 2020 டிசம்பர் மாதம் நியூபோர்ட் கடற்கரை பகுதியில் கிறிஸ்துமஸ் அலங்காரங்களை பார்வையிட்டு வந்த 27 வயது ஹென்றி எட்வர்டோ சல்டானா-மெஜியா மற்றும் அவரது மனைவி 28 வயது கேப்ரியேலா ஆண்ட்ரேட் மற்றும் மூன்று பிள்ளைகள் ஆகியோரின் வாகனம் மீது கிரேஸ் கோல்மன் தமது ரேஞ்ச் ரோவரால் மோதியுள்ளார்.
இதில் சம்பவயிடத்திலேயே ஹென்றி எட்வர்டோ தம்பதி கொல்லப்பட்டனர். அந்த கோர விபத்துக்குப் பிறகு தங்கள் சிதைந்த காரில் சிக்கிக்கொண்டு மூன்று சிறுமிகளும் கதறினர். இதனிடையே, அந்த கதறல் கேட்டு அருகாமையில் வந்த கிரேஸ் கோல்மன், அடுத்த நிமிடமே அங்கிருந்து தப்ப முடிவு செய்துள்ளார்.
ஆனால் பொலிசார் துரிதமாக செயல்பட்டு அவரை கைது செய்தனர். தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சோதனையில், கிரேஸ் கோல்மன் அனுமதிக்கப்பட்ட அளவைவிட மூன்று மடங்கு அதிகமாக மது அருந்தியிருந்தது கண்டறியப்பட்டது.
மேலும், அவர் மீது இரண்டாம் நிலை கொலை வழக்கு பதியப்பட்டது. தற்போது இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்துள்ள நிலையில், கிரேஸ் கோல்மனுக்கு 21 ஆண்டுகள் முதல் ஆயுள் வரையில் சிறைவாசம் விதித்துள்ளனர்.
இந்த கோர விபத்தால் அனாதையாக்கப்பட்ட மூன்று சிறுமிகளும் தற்போது உறவினர்கள் அரவணைப்பில் உள்ளனர். மட்டுமின்றி மூன்று சிறுமிகளும் அந்த விபத்தில் பலத்த காயங்களுடன் தப்பியிருந்தனர். காயங்களில் இருந்து மீண்டு வந்தாலும், உளவியல் ரீதியாக மூன்று சிறார்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.