குறைவான பந்துகளில் 50 டெஸ்ட் விக்கெட்டுகள்: சாதித்த இளம் வீரர்
குறைவான பந்துகளில் 50 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த 2-வது வீரர் என்கிற பெருமையை தென்னாப்பிரிக்க வீரர் ஆலிவியர் பெற்றுள்ளார்.
இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
ஜொகன்னஸ்பர்க்கில் நடைபெறும் 2-வது டெஸ்டில் இந்திய அணி நாணய சுழற்சியில் வென்று துடுப்பாட்டம் தெரிவு செய்தது. காயம் காரணமாக இந்த டெஸ்டிலிருந்து விராட் கோஹ்லி விலகியுள்ளார். இதனால் கே.எல். ராகுல் அணித்தலைவராகக் களம் இறங்கியுள்ளார்.
டெஸ்டின் முதல் நாளில் ஆலிவியரின் அடுத்தடுத்த பந்துகளில் புஜாராவும் ரஹானேவும் ஆட்டமிழந்தார்கள். இதையடுத்து 11-வது டெஸ்டில் 50 விக்கெட்டுகளைப் பூர்த்தி செய்துள்ளார் ஆலிவியர்.
குறைந்த டெஸ்டுகளில் விரைவாக 50 விக்கெட்டுகளை எடுத்த வீரர்களின் பட்டியலில் அவுஸ்திரேலியாவின் டர்னர் முதலிடத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்காவின் வெர்னான் பிலாண்டர் 7 டெஸ்டுகளில் 50 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
குறைந்த பந்துகளில் விரைவாக 50 விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் வெர்னான் பிலாண்டர் முதலிடத்தில் உள்ளார். 1240 பந்துகளில் அவர் இச்சாதனையைச் செய்தார். 2-வது இடத்தை 1486 பந்துகளில் 29 வயது டுவைன் ஆலிவியர் பெற்றுள்ளார்.