23 பந்துகளில் 65 ரன் விளாசிய தூபே: ஆனாலும் தோல்வி..கேப்டன் கூறிய காரணம்
இந்திய அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் நியூசிலாந்து 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டிம் செய்பெர்ட் 62 ஓட்டங்கள் விளாசல்
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்தது.
முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 215 ஓட்டங்கள் குவித்தது. டிம் செய்பெர்ட் (Tim Seifert) 62 (36) ஓட்டங்களும், டேவன் கான்வே (Devon Conway) 23 பந்துகளில் 44 ஓட்டங்களும் விளாசினர்.
டேர்ல் மிட்செல் ஆட்டமிழக்காமல் 18 பந்துகளில் 39 ஓட்டங்கள் (3 சிக்ஸர், 2 பவுண்டரிகள்) விளாசினார். குல்தீப் யாதவ் மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் அபிஷேக் ஷர்மா (0), சூர்யகுமார் யாதவ் (8) ஆகியோர் சொதப்ப, சஞ்சு சாம்சன் 15 பந்துகளில் 24 ஓட்டங்கள் விளாசினார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா 2 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ரிங்கு சிங் 39 ஓட்டங்கள் எடுத்தார்.
தூபே சிக்ஸர்மழை
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிய ஷிவம் தூபே (Shivam Dube) சிக்ஸர்மழை பொழிந்தார். அவர் 23 பந்துகளில் 7 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 65 ஓட்டங்கள் விளாசி வெளியேற, ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் அவுட் ஆனதால் இந்திய அணி 165 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
BCCI/X
நியூசிலாந்து அணித்தலைவர் சான்ட்னர் 3 விக்கெட்டுகளும், ஜேக்கப் டுஃபி மற்றும் இஷ் சோதி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
தோல்வி குறித்து பேசிய இந்திய அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ், "நாங்கள் வேண்டுமென்றே 6 துடுப்பாட்ட வீரர்களுடன் விளையாடினோம் என்று நான் நினைக்கிறேன். எங்களிடம் 5 சிறந்த பந்துவீச்சாளர்கள் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம், மேலும் எங்களை நாங்களே சோதித்துப் பார்க்க விரும்பினோம். உலகக்கிண்ண அணியில் உள்ள அனைத்து வீரர்களையும் நாங்கள் களமிறக்க விரும்பினோம். இல்லையென்றால், நாங்கள் மற்ற வீரர்களை விளையாட வைத்திருக்கலாம்" என தெரிவித்தார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |