ஸ்தம்பிக்கும் விமானப் பயணங்கள்... 1,800 விமானங்கள் ரத்து, 22,000 சேவைகள் தாமதம்
கடுமையான குளிர்காலப் புயல் எச்சரிக்கைகள் மற்றும் பனிப்பொழிவு முன்னறிவிப்பால், கிறிஸ்துமஸ் பயண உச்சக்கட்ட காலகட்டமான வெள்ளிக்கிழமை அன்று, விமான நிறுவனங்கள் 1,800-க்கும் மேற்பட்ட அமெரிக்க விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளன.
பனிப்பொழிவு
நாட்டின் மிகப்பெரிய நகரமான நியூயார்க்கில், இரவோடு இரவாக பத்து அங்குலம் வரை பனி பொழியும் என்றும், வெப்பநிலை உறைநிலைக்குக் கீழே குறையும் என்றும், இந்த குளிர்ந்த வானிலை வார இறுதி வரையிலும் நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க நேரப்படி வெள்ளிக்கிழமை பிற்பகல் 1:00 மணி நிலவரப்படி, குறைந்தது 1,191 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, 3,974 விமான சேவைகள் தாமதமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, தேசிய வானிலை சேவை வெளியிட்டுள்ள தகவலில், நாள் முழுவதும் கிரேட் லேக்ஸ் பகுதியின் வடக்குப் பகுதி முழுவதும் பனிப்பொழிவு இருக்கும் என்று கணித்துள்ளது, மேலும் புயலின் தாக்கம் வடகிழக்கு நோக்கி நகரும் என்றும் தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, விடுமுறைக்குப் பிறகு வீடு திரும்புபவர்களுக்குச் சாலை நிலைமைகள் மிகவும் அபாயகரமானதாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

தாமதமாகும் சேவைகள் 22,349
நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவிக்கையில், குளிர்காலப் புயல் எச்சரிக்கை நடைமுறையில் இருப்பதாகவும், சாலைகளில் பனியை அகற்றுவதற்காக நகர ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நியூயார்க் பகுதி விமான நிலையங்களில் 785 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 4 மணிக்கு வெளியான தரவுகளின் அடிப்படையில்,
ரத்தான விமானங்களின் மொத்த எண்ணிக்கை 1,802 எனவும் தாமதமாகும் விமான சேவைகளின் எண்ணிக்கை 22,349 எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

நியூ ஜெர்சி மற்றும் பென்சில்வேனியா மாகாண நிர்வாகங்கள், மாகாணங்களுக்கு இடையேயான பல பிரதான சாலைகள் உட்பட சில சாலைகளில் வர்த்தக வாகனங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |