கருணாநிதியையும், மு.க.ஸ்டாலினையும் உதயநிதி தூக்கி சாப்பிட்டு விடுவார்: துரைமுருகன் புகழாரம்
உதயநிதியை துணை முதலமைச்சராக்கலாம் என்று திமுகவில் பலரும் விருப்பம் தெரிவித்து வரும் நிலையில், அவரை பற்றி அமைச்சர் துரைமுருகன் புகழ்ந்து பேசியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
தன்னுடைய வாரிசுகள் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய நிலையில், உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வந்தது பெரும் விமர்சனத்தை எதிர்கொண்டது.
இதனைத்தொடர்ந்து, திமுகவில் உள்ள அமைச்சர்களும், உறுப்பினர்களும் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்த நிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி பதவியேற்றார்.
தற்போது இதையும் தாண்டி சில எம்எல்ஏக்களும், தலைவர்களும் உதயநிதியை துணைமுதல்வராக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இதுகுறித்து உதயநிதியிடம் கேட்ட போது , தனக்கு அதில் விருப்பமில்லை என கூறியுள்ளார்.
துரைமுருகன் பேசியது..
இந்நிலையில் திமுக கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் துரைமுருகன், "கருணாநிதியும், முதல்வர் மு.க. ஸ்டாலினும் ஓய்வை எண்ணாமல் உழைக்க கூடியவர்கள். அவர்களை நான் பார்த்திருக்கிறேன். அதை போல உதயநிதியையும் நான் பார்க்கிறேன்.
இவர்கள் இருவரையும் உதயநிதி தூக்கி சாப்பிட்டு விடுவார். நாங்கள் இன்றைக்கு இருப்போம். நாளைக்கு இருக்க மாட்டோம். இந்த இயக்கம் எப்போதும் இருக்க வேண்டும். அப்படி ஒரு தலைமை அடுத்த தலைமுறைக்கு வரும் என்றால், முதல் ஆளாக தோளில் சுமந்து செல்ல தயாராக இருக்கிறேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |