பல மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான தொழில்: லண்டனில் சிக்கிய இந்திய வம்சாவளி மூவர்
லண்டனில் ஈலிங் பகுதியில் பல மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான போதை மருந்து ஆலை ஒன்றை நடத்தி வந்த இந்திய வம்சாவளி மூவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போதை மருந்து ஆலை
ஈலிங் பகுதியில் ரகசியமாக முன்னெடுத்துவந்த அந்த போதை மருந்து ஆலையின் ஊடாக தொடர்புடைய மூவரும் சுமார் 3.5 மில்லியன் பவுண்டுகள் வரையில் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
Image: Met Police
இந்த வழக்கில் அலன் வாலண்டைன், இவரது மகன் ரோஷன் வாலண்டைன் மற்றும் நண்பர் க்ருணால் படேல் ஆகிய மூவருமே சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டவர்கள்.
இவர்கள் மூவரும் டார்க் வெப் சந்தையில் பல்வேறு கணக்குகளை துவங்கி உயர் ரக போதை மருந்துகளை விற்பனை செய்து வந்துள்ளனர். Puzzle Logistics Limited என்ற போலி நிறுவனத்தின் ஊடாகவே இந்த மூவரும் போதை மருந்துகளை தயாரித்து விற்பனை செய்துள்ளனர்.
மேலும் இவர்களிடம் இருந்து போதை மருந்துகளை வாங்கும் டார்க் வெப் வாடிக்கையாளர்கள், கட்டணமாக கிரிப்டோகரன்சியில் செலுத்தியுள்ளனர். இந்த நிலையில், 2022 ஆகஸ்டு மாதம் 15 போதை மருந்து பொதிகளுடன் க்ருணால் படேல் கைதாகியுள்ளார்.
புழக்கத்தில் இருக்கும் மருந்துகளின் போலி
அதே நாளில், பொலிசார் முன்னெடுத்த தீவிர நடவடிக்கையின் முடிவில் அலன் வாலண்டைன், மற்றும் ரோஷன் வாலண்டைன் ஆகிய இருவரும் கைதாகியுள்ளனர். இதில் அலன் வாலண்டைன் தாம் ஒரு மருத்துவர் எனவும் மருந்தக தொடர்பில் உரிய கல்வி அறிவும் இருப்பதாக விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.
Image: Met Police
ஆனால் இந்த மூவரும் போலியான மருந்துகளை தயாரித்துள்ளதாகவும், பிரித்தானியாவில் பரவலாக புழக்கத்தில் இருக்கும் மருந்துகளின் போலிகளை பெருமளவில் இவர்கள் தயாரித்துள்ளதும் விசாரணையில் அம்பலமானது.
இதனையடுத்து 40 வயதான க்ருணால் படேல் 39 வயதான ரோஷன் ஆகிய இருவர் மீதும் பதியப்பட்டிருந்த வழக்குகளில், இருவரும் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டது. மூன்றாவது நபர் அலன் மீதான வழக்குகளும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.