குழந்தை பருவ புற்றுநோய்: ஆரம்பத்திலேயே கண்டறிய மருத்துவர் கூறும் அறிகுறிகள்!
ஒவ்வொரு வருடமும் 14 வயதிற்குட்பட்ட 4 லட்சம் குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
ரத்தப் புற்றுநோய், மூளை புற்றுநோய், லிம்போமா, நரம்புத்திசு புற்றுநோய், வில்ம்ஸ் கட்டிகள் போன்றவை குழந்தைகளை அதிகமாக பாதிக்கிறது.
குழந்தைகளுக்கு ஏற்படும் பெரும்பாலான புற்றுநோய்களை சிகிச்சையின் மூலம் குணப்படுத்திவிடலாம்.
சரியான நேரத்தில் நோயை கண்டறியாமை, ஆரம்பத்திலேயே தேவையான பரிசோதனையை எடுக்காமல் இருப்பது போன்ற காரணங்களால் மட்டுமே புற்றுநோய் பாதித்த குழந்தைகள் இறக்க நேரிடுகின்றன.
ஆகையால் ஆரம்ப கட்டத்திலேயே புற்றுநோய் இருப்பதை கண்டுபிடித்துவிட்டால், 80% குழந்தைகளை குணப்படுத்திவிடலாம்.
அதேசமயம் புற்றுநோய் தொடர்பான ஆரம்ப அறிகுறிகள் ஏதாவது உங்கள் குழந்தைகளிடம் தெரிகிறதா என்பதில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
இதுகுறித்து ஆஸ்தெர் CMI மருத்துவமணையின் ரத்தவியல், புற்றுநோயியல் மற்றும் குழந்தை நல மருத்துவரான டாக்டர்.ரகுராம் விளக்கம் தருகிறார்.
உங்கள் குழந்தைகளுக்கு கீழ்க்கண்ட அறிகுறிகள் ஏதாவது இருந்தால், உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.
அறிகுறிகள்
ஒரு வாரத்திற்கு மேலாக காய்ச்சல் மற்றும் அதோடு சேர்த்து இரவு நேரத்தில் வியர்வை வருதல்.காரணமேயில்லாமல் காயம் ஏற்படுதல் அல்லது ரத்தம் கசிதல். சருமம் வெளிரிப் போயிருப்பது.
பசியின்மை, உடல் எடை குறைதல், மாதக் கணக்கில் சோர்வாக இருப்பது.காலை வேளைகளில் கடுமையான தலைவலி, அதோடு சேர்த்து வாந்தி.
குழந்தைகள் விளையாடும் போது எலும்பில் வலி உண்டாவது. இரவு நேரத்தில் இந்த வலி அதிகமாகி அவர்களை நிம்மதியாக தூங்கவிடாது.
நடப்பதில் தடுமாற்றம், அடிக்கடி கிழே விழுவது, நிதானம் இல்லாமை. பார்வை குறைபாடு, பார்ப்பதெல்லாம் இரண்டாக தெரிவது, எதிரில் இருப்பவர்கள் வெள்ளை நிறத்தில் தெரிவது.
உடலில் முக்கியமாக அடிவயிறு, கழுத்து, மார்பு, அக்குள் போன்ற பகுதிகளில் தோன்றும் கட்டிகள் அல்லது வீக்கம் சீக்கிரம் குணமாகாமல் இருப்பது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |