பிரித்தானியாவில் ஈஸ்டர் மிகக் கடுமையாக இருக்கும்: NHS தலைவர்கள் விடுத்த எச்சரிக்கை
பிரித்தானிய நிர்வாகம் மீண்டும் கொரோனா விதிகளை அமுலுக்கு கொண்டுவராவிட்டால் இந்த முறை ஈஸ்டர் மிகக் கடுமையாக இருக்கும் என NHS தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கூட்டம் மிகுந்த பகுதிகளில் மாஸ்க் கட்டாயமாக்குவது, பல பேர் ஒன்றாக கூடும் தனிப்பட்ட விருந்து கூடுகைகளை மட்டுப்படுத்துவது உள்ளிட்ட விதிகளை பிரித்தானியா மீண்டும் அமுலுக்கு கொண்டுவர வேண்டும் எனவும், அவ்வாறான முடிவை விரைந்து மேற்கொண்டால், ஈஸ்டர் வாரத்தின் நெருக்கடியை எதிர்கொள்ளலாம் என NHS தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த வாரம் பதிவான 20,331 கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது பிப்ரவரி 2021 க்குப் பிறகு பதிவான அதிகபட்ச எண்ணிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த ஸ்வாப் சோதனையை ரத்து செய்வதாக போரிஸ் நிர்வாகம் மேற்கொண்ட முடிவு காரணமாகவே கடந்த வாரம் பாதிப்பு எண்ணிக்கை உச்சம் கண்டது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
இந்த நிலையிலேயே NHS தலைவர்கள் உடனடி நடவடிக்கை தேவை என கருத்து தெரிவித்துள்ளனர். துரித நடவடிக்கைகள் முன்னெடுப்பதால் மட்டுமே கொரோனா பாதிப்புகள் மேலும் அதிகரிப்பதை தடுக்க முடியும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மட்டுமின்றி, அரசாங்கம் மீண்டும் பொது தகவல் பிரச்சாரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும், இதனால் தேவையின்றி மக்கள் மருத்துவமனையை நாடுவதை கட்டுப்படுத்தலாம் எனவும் NHS தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இங்கிலாந்தில் தற்போது 13 பேரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்பில் அரசாங்கம் கவலை கொள்வதாக தெரியவில்லை எனவும், கொரோனா பாதிப்புடன் வாழ பழகுங்கள் என பிரித்தானிய மக்களை போரிஸ் அரசாங்கம் கைவிட்டதாகவே தெரிகிறது எனவும் நிர்வாகி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மட்டுமின்றி, இங்கிலாந்தில் பெரும்பாலான மக்களுக்கு இலவச கொரோனா சோதனைகளும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன.
நோய் தொற்றும் ஆபத்து நிலையில் இருப்பவர்கள், உடல் நிலை பாதிப்புக்குள்ளானவர்கள் உள்ளிட்ட சில பேர்களுக்கு மட்டும் இலவசமாக ஸ்வாப் சோதனை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.