விமானத்திலிருந்து கருப்பினத்தவரை வெளியேற்ற பொலிசாரை அழைத்த பணிப்பெண்... மனிதாபிமானம் செத்துப்போகவில்லை என நிரூபித்த சக பயணிகள்: புல்லரிக்கவைத்த ஒரு சம்பவம்
லண்டனிலிருந்து ஸ்பெயின் புறப்பட்ட விமானம் ஒன்றில் பயணித்த கருப்பினத்தவர்களை விமானத்திலிருந்து வெளியேற்றுவதற்காக ஆயுதம் தாங்கிய பொலிசாரை வரவழைத்தார் விமான பணிப்பெண் ஒருவர்.
ஆனால், அந்த கருப்பினத்தவருக்கு ஆதரவாக சக பயணிகள் அனைவரும் குரல் கொடுக்க, எதிர்பாராத திருப்பம் ஒன்று நிகழ்ந்தது.
லண்டன் Gatwick விமான நிலையத்திலிருந்து ஸ்பெயினிலுள்ள Malaga விமான நிலையம் நோக்கி புறப்பட்ட Easyjet நிறுவன விமானம் ஒன்றில், இரண்டு கருப்பினத்தவர்கள் பயணித்துள்ளனர். அவர்கள் இருவரும் தங்கள் ஷூக்களை கழற்றி இருக்கைக்கு அடியில் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்திருக்கிறார்கள்.
அப்போது, விமான பணிப்பெண் ஒருவர் அவர்கள் emergency exit வரிசையில் அமர்ந்திருப்பதால், ஷூக்கள் தொந்தரவாக இருக்கும் என்று கூறி, ஷூக்களை அணிந்துகொள்ளுமாறு கூறியிருக்கிறார். அந்த இருவரும் வெறுப்படைந்து பெருமூச்சுவிட, உடனே அந்த பணிப்பெண், விமானத்தில் கீழ்ப்படியாத இரண்டு பயணிகள் இருப்பதாக கூறி ஆயுதம் தாங்கிய பொலிசாரை அழைத்துவிட்டார்.
சிறிது நேரத்தில் ஆயுதம் தாங்கிய பொலிசார் நான்குபேர் விமானத்துக்குள் நுழைந்து அந்த கருப்பின பயணிகளின் பெட்டிகளை விமானத்திலிருந்து இறக்கியதுடன், அவர்களது பாஸ்போர்ட்களையும் பறிமுதல் செய்துள்ளார்கள்.
ஆனால், அப்போது எதிர்பாராத ஒரு திருப்பம் நிகழ்ந்தது. விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும், அந்த கருப்பின இளைஞர்கள் எந்த தவறும் செய்யவில்லை என அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கத் தொடங்கினர்.
அதற்குள் அந்த இளைஞர் இருக்கையிலிருந்து எழுந்திருக்க, ’இல்லை, நீங்கள் எழுந்திருக்கவேண்டிய அவசியமில்லை, உட்காருங்கள்’ என பயணிகள் குரல் கொடுக்கத் துவங்கினர்.
அத்துடன், பொலிசார் ஒருவரும், இதில் நான் தலையிட அவசியமில்லை, இங்கே பிரச்சினை ஒன்றும் ஏற்படவில்லையே என கூறுவதையும் வெளியான வீடியோ ஒன்றில் காண முடிகிறது.
உடனடியாக விமானத்தில் கேப்டன் ஒரு அறிவிப்பைச் செய்தார். அதன்படி ஓவராக ரியாக்ட் செய்த அந்த விமான பணிப்பெண் மட்டுமின்றி, அந்த விமானத்தில் இருந்த பணியாட்கள் அனைவரும் உடனடியாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அவர்களுக்கு பதிலாக வேறு பணிப்பெண்களும், பணியாட்களும் அனுப்பப்பட, மூன்று மணி நேர தாமதத்திற்குப் பின் விமானம் புறப்பட்டது.
கருப்பினத்தவருக்கு எதிராக இனவெறுப்பு அதிகம் காணப்படும் இந்நாட்களில், அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து, மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை என்பதை உணர்த்திவிட்ட அந்த விமான பயணிகளை நினைத்தால் புல்லரித்துப்போகிறது.