இந்த உணவுகளுடன் சேர்த்து முட்டையை சாப்பிடவே கூடாது! இரவில் சாப்பிட்டாலும் தொல்லை
முட்டை அதிக ஊட்டச்சத்துள்ள ஒரு உணவாக உள்ளது. நாம் சாப்பிடும் சாதாரண கோழி முட்டையில் நமக்குத் தேவையான அனைத்து வைட்டமின் சத்துகளும் நிறைந்திருக்கின்றன.
40 முதல் 50 கிராம் எடை கொண்ட ஒரு முட்டையில், 187 மில்லிகிராம் கொழுப்புச்சத்து உள்ளது. சாதாரணமாக ஒரு மனிதருக்கு ஒரு நாளைக்குத் தேவையான கொழுப்புச்சத்தின் அளவு 300 மில்லிகிராம்தான். இரண்டு முட்டைகள் அந்தக் கொழுப்புச்சத்தின் தேவையைப் பூர்த்தி செய்துவிடும்.
78 கலோரிகள் கொண்ட ஒரு முட்டையில் 6.6 கிராம் புரதச்சத்து இருக்கிறது. குறிப்பாக, நாட்டுக்கோழி முட்டையில் ரிபோஃப்ளேவின், பயோடின் வைட்டமின்கள் பி2, பி6, பி12, ஏ, டி ஆகியவையும் செலினியம், துத்தநாகம், இரும்பு, காப்பர், அயோடின் போன்ற கனிமச்சத்துகளும் இருக்கின்றன.
அதிக எடையோடு இருப்பவர்கள், உடலில் கொழுப்புச்சத்து அதிகம் உள்ளவர்கள் வாரத்துக்கு இரண்டு முறை முட்டை சாப்பிட்டால் போதுமானது. ஆனால், அவர்களும் முட்டையில் உள்ள மஞ்சள் கருவைத் தவிர்த்துவிட்டு, வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிடுவது நல்லது.
கருவுற்றிருக்கும் பெண்கள், முட்டை சூப், அவித்த முட்டை, முட்டைத் துருவல் என உட்கொள்ளலாம். ஆஃப் பாயிலுக்குக் கண்டிப்பாக `நோ’ சொல்லிவிட வேண்டும். ஆஃப் பாயில் சாப்பிடும் பெண்களின் குழந்தைகளுக்கு சால்மோனெல்லா (Salmonella) போன்ற பாக்டீரியா பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
இதயம் தொடர்பான பாதிப்பு உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், வேறு ஏதும் உடல் பிரச்னைகள் உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின்படி முட்டையைச் சாப்பிடுவது நல்லது.
புரோட்டா, பீட்சா, பப்ஸ் போன்ற மைதாவில் செய்த உணவுகளைச் சாப்பிடும்போது முட்டை சாப்பிடக் கூடாது. கடினமான உடற்பயிற்சி செய்பவர்களைத் தவிர மற்றவர்கள் பச்சையாக முட்டையைச் சாப்பிடக் கூடாது. தொடர்ந்து பச்சை முட்டை சாப்பிடுபவர்களுக்கு பயோட்டின் (வைட்டமின்-பி) குறைபாடு வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
காலை நேரத்தில் முட்டை உட்கொள்வது சிறந்தது. மதியம் உட்கொள்பவர்கள், அது சமைக்கப்பட்ட நேரத்தை அறிந்துகொண்டு சாப்பிட வேண்டும். சமைத்து வெகு நேரமான முட்டையைச் சாப்பிடாமல் இருப்பதே நல்லது.
இரவில் சாப்பிட்ட பிறகு, நம் உடல் உழைப்பு மிகவும் குறைவாக இருக்கும். எனவே, இரவில் முட்டை சாப்பிடுவதை முடிந்தளவு தவிர்த்துவிடலாம், தொடர்ந்து இரவில் முட்டை சாப்பிட்டால் உடலுக்கு எதேனும் பிரச்சினை வர வாய்ப்புகள் உண்டு.