தினமும் அசைவம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
அசைவ உணவு வகைகளில் புரத சத்து அதிகம் உள்ளது. உடலின் இயக்கம் சீராக நடைபெறுவதில் புரதத்தின் பங்களிப்பு முக்கியமானது. விலங்குகளில் உள்ள புரதங்களில் அனைத்து விதமான அமினோ அமிலங்களும் இருக்கின்றன.
அவை உடலுக்கு முழுமையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்கின்றன. ஆனால் தாவரங்களில் இருந்து கிடைக்கும் புரதங்களில் அவற்றின் அளவு குறைவாகவே இருக்கும்.
உடலில் புரதத்தின் அளவு குறையும்போது உடல் பலவீனம், கவனக்குறைவு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். குழந்தைகளுக்கு புரத பற்றாக்குறை ஏற்பட்டால் வளர்ச்சி தடைபடும். வளர்சிதை மாற்ற விகிதமும் பாதிப்புக்குள்ளாகும். ஆதலால் உடலுக்கு தேவையான புரதம் கிடைப்பதற்கு அசைவ உணவு சாப்பிடுவது அவசியமானது.
அதே சமயம் தினசரி அசைவம் சாப்பிடும்போது, நம் உடலுக்கு கொழுப்புச்சத்து அளவுக்கு அதிகமாக கிடைக்கிறது. இந்த கொழுப்பு அப்படியே நம் உடலில் தங்கும்போது உடல்பருமன் ஏற்படுகிறது. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், இதய நோய் போன்றவற்றுக்கு உடல்பருமன் தான் தலைவாசல்.
அசைவத்தில் கொழுப்பு சத்து அதிகம் உள்ளது. இது, இதய ரத்த நாளங்களில் உள்ள நல்ல கொழுப்பை கட்டுப்படுத்தி, கெட்ட கொழுப்பை அதிகரிக்க செய்யும்போது, ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால், மாரடைப்பு, திடீர் இதய துடிப்பு முடக்கம், பக்கவாதம் போன்ற தீவிரமான பாதிப்பு ஏற்படுகிறது.
அசைவம் சாப்பிடும்போது உடலில் அளவுக்கு அதிகமாக புரதம் சேர்கிறது. இப்புரதத்தை நீக்கவேண்டிய பணியை சிறுநீரகங்கள் செய்கின்றன. தொடர்ந்து அளவுக்கு அதிகமாக வேலைசெய்ய நேர்கிறபோது, ஒருகட்டத்தில் சிறுநீரகங்கள் பழுதாகி, முழுமையாக செயல்படாமல் போகவும் வாய்ப்பு உள்ளது. அளவுக்கு அதிமான கொழுப்பு உடலுக்கு ஆபத்தாகும்.