பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கப்படும் - நீதிமன்றத்தில் பதிலளித்த தேர்தல் ஆணையம்
பாமகவின் இரு தரப்பும் பிரச்சனைக்குரியதாக இருந்தால் மாம்பழம் சின்னம் முடக்கப்படும் என நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பாமக யாருக்கு சொந்தம்?
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது அன்புமணி ராமதாஸ் இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக கட்சி, இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாமகவுக்கு நான் தான் தலைவர் என்றும், தங்களுடைய தரப்புக்கு கட்சியின் சின்னமான 'மாம்பழம்' ஒதுக்க வேண்டும் என்றும், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் அனுப்பி இருந்தார்.
இந்த கடிதத்திற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், பாமக நிர்வாகிகள் அன்புமணியை தான் தலைவராக தேர்வு செய்துள்ளதற்கான தரவுகள் உள்ளன. 2026 ஆம் ஆண்டு ஆகஸ்டு 1 ஆம் திகதி வரை அன்புமணி தான் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்றும் தெரிவித்துள்ளது.
"அன்புமணி போலியான ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளார், அன்புமணி சதி திட்டம் தீட்டி, தேர்தல் ஆணையத்தை கையில் போட்டுக்கொண்டு 2026 வரையில் பதவியில் நீடிப்பதாக தேர்தல் ஆணையம் கடிதம் கொடுத்துள்ளது.

இது தேர்தல் ஆணையத்தின் மோசடியான துரோக நடவடிக்கை. தேர்தல் ஆணையம் அன்புமணிக்கு உடந்தையாக உள்ளது. அன்புமணி கட்சியை என்னிடமிருந்து சூழ்ச்சியால் பறித்துக் கொண்டது கட்சி திருட்டு செயல்." என ராமதாஸ் குற்றஞ்சாட்டினர்.
இதனைத்தொடர்ந்து, இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில், அன்புமணி தரப்பு கட்சியை தங்களிடமிருந்து பறித்துக்கொண்டதாக ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மாம்பழம் சின்னம் முடக்கப்படும்
இந்த மனு, நீதிபதி மினி புஷ்கர்னா முன்னிலையில் இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
தமிழகத்தில் தேர்தல் நடந்தால் பாமகவில் யார் அங்கீகரிக்கும் வேட்பாளரை தேர்தல் ஆணையம் ஏற்கும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், ""தற்போது இந்த இரு தரப்பும் பிரச்சனைக்குரியதாக இருந்தால் படிவம் A மற்றும் படிவம் B ஆகியவற்றில் இரு தரப்பு கையெழுத்து போடுவதையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளாது பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கப்படும்.
கட்சித் தலைவர் விவகாரத்தில் நாங்கள் எந்த முடிவையும் எடுப்பதில்லை. எங்களிடம் உள்ள ஆவணங்கள் அடிப்படையில் அன்புமணியை தலைவராக இருப்பதாக தெரிவித்தோம். அன்புமணி தலைவர் இல்லையென்றால் உரிய ஆதாரத்துடன் அணுகலாம்" என தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, அங்கீகரிக்கப்படாத கட்சியின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. பாமக கட்சிக்கு உரிமைகோரும் ராமதாஸ் சிவில் நீதிமன்றத்தை நாடலாம் என கூறி டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |