இலங்கை தமிழர்கள் குடியுரிமைக்கு வலியுறுத்தல் உள்ளிட்ட அறிவுப்புகள்! ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்
தமிழக சட்டமன்றத்தில் ஆளுநரின் உரை ஏமாற்றமளிக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் 16வது சட்டமன்ற கூட்டத்தின் முதல் தொடர் இன்று தொடங்கியது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கப்பட்டது. தொடர்ந்து உரையாற்றிய கவர்னர் மேலும் கூறியதாவது;-
அரசின் ஒவ்வொரு செயலும் சமூகநீதி, ஆண் பெண் சமத்துவம், அனைவருக்கும் பொருளாதார நிதியை அடிப்படையாக கொண்டிருக்கும்.
மாநிலங்களுக்கு சுயாட்சி என்ற இலக்கை எட்ட அரசு உறுதியாக உள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகள் தமிழகம் முழுவதும் மீண்டும் அமைக்கப்படும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தேவைப்படும் உதவிகளுக்கு, பல்வேறு கோரிக்கைகளாக பிரதமரிடம் முதல்வர் முன்வைத்திருக்கிறார்.
ஒன்றிய அரசு வழங்கும் தடுப்பூசியின் ஒதுக்கீடு போதுமான அளவில் இல்லை. தமிழகத்திற்கு ஒன்றிய அரசு ஒதுக்கும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை உயர்த்திட வேண்டும். `உறவுக்கு கை கொடுப்போம்.. உரிமைக்கு குரல் கொடுப்போம்’ என்ற கொள்கைக்கு ஏற்ப ஒன்றிய அரசுடன் நல்லுறவு பேணுவோம்.
விவசாயிகள் நலனை பாதுகாக்க, வேளாண் உற்பத்தியை பெருக்க, ஆண்டுதோறும் வேளாண் துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன்வடிவு கொண்டு வரப்படும்.நிதிநிலை குறித்து ஜூலை மாதத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.
இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்களும், திருத்தங்களும் மேற்கொள்ள மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்.
100 ஆண்டுகளை கடந்து நிற்கும் தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டுக் கொள்கை காலத்தை வென்று சமூகநீதியை உறுதி செய்துள்ளது;
தமிழ்நாட்டில் வழங்கப்படும் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னைகளில் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாத்திட அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் போன்ற அறிவுப்புகளை கவர்னர் வெளியிட்டார்.
இதற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநர் உரை ஏமாற்றம் அளிக்கிறது.
சட்டப்பேரவைத் தேர்தலின்போது 505 அறிவிப்புகளை திமுக வெளியிட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த அறிவிப்புகள் நிறைவேற்றப்படும் என்றனர்.
அதில் முக்கியமான வாக்குறுதிகள் கூட ஆளுநர் உரையில் இல்லை. இது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்தார்கள். சட்டப்பேரவையிலும் ஸ்டாலின் வலியுறுத்தினார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார்.
ஆனால், குழு ஒன்றை அமைத்துள்ளார்கள். நீதிபதி ராஜன் தலைமையில் குழு அமைத்துள்ளனர். அந்தக் குழு சமர்ப்பிக்கும் பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை இருக்கும் என்கிறார்கள். ஆனால், அவர்கள் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக இருந்தபோதும், தேர்தல் பிரச்சாரத்தின்போதும் பேசியது திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்பதே.
ஆனால், அதைச் செய்யவில்லை. சில நாட்களுக்கு முன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்னும் நீட் தேர்வு முடிவுக்கு வரவில்லை.
அதனால் மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராக வேண்டும் என்று பேட்டி அளித்தார். அப்படியானால் தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு என்கிற அளவில்தான் அவர்களது பேச்சு உள்ளது.
தேர்தல் நேரத்தில் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே அவர்கள் நிறைவேற்றவில்லை என்பதுதான் தற்போதுள்ள நிலை என கூறினார்.