கனடா நெடுஞ்சாலையில் இந்திய இளைஞருக்கு நேர்ந்த சோகம்: 18 வயது இளைஞர் கைது
கனடாவின் நெடுஞ்சாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இந்திய இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
கனடா நெடுஞ்சாலையில் துப்பாக்கிச் சூடு
கடந்த வாரம் கனடாவின் எட்மண்டன் நகருக்கு தெற்கே உள்ள ராணி எலிசபெத் II நெடுஞ்சாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 22 வயது இந்திய இளைஞர் பிரிந்தர் சிங்(Birinder Singh) கொல்லப்பட்டுள்ளார்.
மார்ச் 14ம் திகதி பிரிந்தர் சிங் தன்னுடைய இந்திய நண்பர்கள் இரண்டு பேருடன் ஹோண்டா சிவிக் காரில் லெடியூக் நெடுஞ்சாலையில் மலைப் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் அருகே பிக்கப் டிரக் ஒன்று வந்த நிலையில், அதிலிருந்த நபர் இளைஞர்களிடம் “சமாதானச் சிக்னலை”(Peace sign) காட்டியுள்ளார். பதிலுக்கு காரை ஓட்டிச் சென்ற பிரிந்தர் சிங்கும் நட்பை வெளிப்படுத்தும் விதமாக கை சைகையை காட்டியுள்ளார்.
ஆனால் அடுத்த சில வினாடிகளில் பிக்கப் டிரக்கில் இருந்த நபர் பிரிந்தர் சிங்கை சுட்டு விட்டு அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்றுள்ளார்.
கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், துரதிர்ஷ்டவசமாக பின்னர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
காரில் சுற்றுலா சென்ற மூன்று இளைஞர்களும் இந்தியாவை சேர்ந்தவர்கள், உயிரிழந்த பிரிந்தர் சிங் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கல்விக்காக சர்வதேச மாணவராக கனடாவிற்குள் குடிபெயர்ந்துள்ளார்.
வணிக நிர்வாக கல்வியை பிராம்ப்டனில் முடித்த பிரிந்தர் சிங், வேலைவாய்ப்பிற்காக கடந்த அக்டோபர் மாதம் எட்மண்டனுக்கு இடம்பெயர்ந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட தாக்குதல்தாரி
பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையின் இறுதியில், லாயிட்மின்ஸ்டரைச் சேர்ந்த ஜிம்மி காஸ்னர் என்ற 18 வயது இளைஞர் சனிக்கிழமை RCMP பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சஸ்காட்செவனில்(Saskatchewan) அருகே உள்ள கணூ லேக்(Canoe Lake) பகுதியில் பொலிஸாரிடம் பிடிபட்ட ஜிம்மி காஸ்னர் மீது இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
காவலில் வைக்கப்பட்டுள்ள ஜிம்மி, நீதிமன்ற விசாரணைக்கு ஆல்பெர்ட்டாவிற்கு மீண்டும் அழைத்து வரப்பட உள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |