பிரித்தானியாவில் ஈழத்து கவிஞரின் நாவல் வெளியீட்டு விழா
ஈழத்தின் கவிஞரும் நாவலாசிரியருமான தீபச்செல்வனின் 'பயங்கரவாதி' நாவல் அறிமுக விழா பிரித்தானியாவில் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வு நேற்றையதினம் (25.06.2023) Alperton community school இன் பிரமாண்ட அரங்கில் நூற்றுக் கணக்கான மக்களின் வருகையுடன் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
வணக்கம் லண்டன் இணையத்தின் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற இந்த நிகழ்வில் திரள் அமைப்பும் கிளி பீப்பிள் அமைப்பும் இதற்கான ஆதரவை வழங்கியுள்ளன.
தாயக படைப்பாளி
பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தந்து, அரங்கை நிறைத்து, தாயக படைப்பாளியின் படைப்பை வரவேற்றுள்ளனர்.
நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர்கள், முக்கிஸ்தர்கள் மங்கல விளக்கேற்ற, நிகழ்வுத் தொகுப்பை துவாரகி நிலக்சன் வழங்கினார். இன்றைய நிகழ்வை திரள் அமைப்பின் செயற்பாட்டாளர், ஊடகவியலாளர், விமர்சகர் பா. நடேசன் தலைமை தாங்கி நடாத்தியுள்ளார்.
நிகழ்வில் முதலில் படைப்பிலக்கியத்தில் தீபச்செல்வன் என்ற தலைப்பில் ஈழத்து இளம் எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றிதை தொடர்ந்து பயங்கரவாதி நாவல் குறித்து அரசியல் செயற்பாட்டாளரும் விமர்சகருமாகிய சாரா ராஜன், ஊடகவியலாளரும் மெய்வெளி தொலைக்காட்சி இணை இயக்குனருமான சாம் பிரதீபன் ஆகியோர் பேச்சுக்களை நிகழ்த்தியுள்ளனர்.
அத்துடன் குறித்த நிகழ்வில் தாயகப் படைப்பாளி தீபச்செல்வன், நேரடியாக கலந்துகொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அது கைகூடாத நிலையில் தொலைபேசி வழியாக நெகிழ்ச்சி மிக்க ஏற்புரையினை நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |