Egg Puffs: நாவூறும் சுவையில் முட்டை பப்ஸ்.., வீட்டிலேயே குக்கரில் செய்யலாம்
பேக்கரியில் கிடைக்கும் தின்பண்டங்களில் முட்டை பப்ஸை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.
அதுவும் குறிப்பாக மாலை நேரத்தில் டீயுடன் முட்டை பப்ஸை சேர்த்து சாப்பிட அவ்வளவு நிறைவாக இருக்கும்.
அந்தவகையில், சுவையான முட்டை பப்ஸை வீட்டிலேயே குக்கரில் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மைதா- 2 கப்
- உப்பு- தேவையான அளவு
- வெண்ணெய்- 125gm
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- கடுகு- ½ ஸ்பூன்
- சோம்பு- 1 ஸ்பூன்
- வெங்காயம்- 2
- பச்சைமிளகாய்- 1
- இஞ்சி- 1 துண்டு
- பூண்டு- 2 பல்
- கறிவேப்பிலை- 1 கொத்து
- மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்
- கரம் மசாலா- 1 ஸ்பூன்
- மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- தக்காளி- 2
- முட்டை- 5
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, தண்ணீர் சேர்த்து பிணைந்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இந்த மாவை இரண்டாக பிரித்து சப்பாத்தி போல் தேய்த்து அதன் மீது வெண்ணெய் மற்றும் மைதா மாவு தூவி தேய்த்த மற்றொரு மாவை மேலே வைக்கவும்.
அடுத்து இதனை மடித்து 1 மணி நேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்து மீண்டும் சப்பாத்தி போல் தேய்த்து அதன் மீது வெண்ணெய் மற்றும் மைதா மாவு தூவி மடித்து பிரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும்.
இதற்கடுத்து இந்த மாவை தேய்த்து சிறிய சிறிய சதுர துண்டுகளாக வெட்டி எடுத்து மீண்டும் பிரிட்ஜில் வைக்கவும்.
பின்னர் ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சோம்பு, வெங்காயம், அரைத்த இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் விழுது சேர்த்து வதக்கவும்.
இதனையடுத்து இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு மற்றும் தக்காளி சேர்த்து 10 நிமிடம் வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் வெட்டி வைத்த பப்ஸ் சீட்டில் மசாலா கலவை மற்றும் வேகவைத்த முட்டை வைத்து அதன் ஓரங்களை மடித்து விடவும்.
இதன் மேல் ஒரு முட்டையை கலந்து தடவவும். பின் குக்கரில் உப்பு சேர்த்து ஒரு ஸ்டாண்ட் வைத்து மூடியில் விசில் வைக்காமல் 5 நிமிடம் மூடி சூடுபடுத்தவும்.
இறுதியாக ஒரு தட்டில் பப்ஸை வைத்து குக்கரில் 25 நிமிடம் மிதமான தீயில் மூடி வேகவைத்து எடுத்தால் சுவையான முட்டை பப்ஸ் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |