வெளிநாடொன்றில் கடலில் மூழ்கிய படகு: இரண்டு பிரித்தானியர்கள் உட்பட 16 பேர் மாயம்
சுற்றுலாப்பயணிகள் பயணித்த படகொன்று செங்கடலில் மூழ்கியதில் 16 பேர் மாயமாகியுள்ள நிலையில், அவர்களில் இருவர் பிரித்தானியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
கடலில் மூழ்கிய படகு
ஞாயிற்றுக்கிழமையன்று எகிப்திலுள்ள Port Ghalib என்னுமிடத்திலிருந்து 31 சுற்றுலாப்பயணிகள் மற்றும் 13 பணியாளர்களுடன் Sea Story என்னும் படகு புறப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை, Marsa Alam என்னுமிடத்தின் அருகே அந்த படகு திடீரென கவிழ்ந்துள்ளது. திடீரென எழுந்த பெரிய அலை ஒன்று அந்த படகைக் கவிழ்த்ததாக கூறப்படுகிறது.
ஐந்து நிமிடங்களுக்குள் படகு தண்ணீரில் மூழ்க, படகில் அறைகளுக்கு வெளியே இருந்தவர்கள் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்ததால் மீட்கப்பட்டுள்ளார்கள். படகிலுள்ள அறைகளுக்குள்ளிருந்தவர்களால் வெளியே வர இயலாததால், அவர்கள் உயிரிழந்துள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், தண்ணீரில் தத்தளித்த 28 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளார்கள். மற்ற 16 பேரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி தொடர்கிறது.
இதற்கிடையில், காணாமல் போனவர்களில், அல்லது உயிரிழந்தவர்களில் இரண்டு பேர் பிரித்தானியர்கள் என தெரியவந்துள்ளது.
அவர்களுடைய உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரித்தானிய வெளியுறவு அலுவலக அதிகாரிகள், அவர்களுக்குத் தேவையான உதவிகள் தூதரகம் மூலம் வழங்கப்பட்டுவருவதாகத் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |