பெண்கள் புறக்கணிக்கப்பட்டதால் சர்ச்சை - மூடப்பட்ட ஈபிள் கோபுரம்
Eiffel tower shut over women staff row: பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரின் அடையாளமாக விளங்கும் ஈபிள் கோபுரம் திங்கட்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டது.
காரணம், இந்து மத குழுவான BAPS (Bochasanwasi Akshar Purushottam Swaminarayan Sanstha) சார்பில் சுமார் 100 பேர் கொண்ட குழு ஈபிள் கோபுரத்திற்கு வந்த போது, பெண் பணியாளர்கள் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சம்பவம் குறித்து ஊழியர் சங்க பிரதிநிதி டயான் டாவோயின் தெரிவித்ததாவது:
“அந்த குழுவினர் கோபுரம் வழியாகச் சென்றபோது, பெண் பணியாளர்கள் தங்கள் பணியிடங்களை விட்டு வெளியேறும்படி கூறப்பட்டனர். அவர்களின் இடத்தில் ஆண்கள் பணியாற்றினர்” என்றார். இதனால் ஊழியர்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது.
இந்த சம்பவம் வார இறுதியில் நடந்ததால், திங்கட்கிழமை காலை ஊழியர்கள் கூட்டம் நடத்தி, மேலாண்மையுடன் உரையாடி, இனி பெண்கள் இவ்வாறு புறக்கணிக்கப்படக்கூடாது என வலியுறுத்தினர். இதனால் கோபுரம் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.
பாரிஸ் மேயர் இம்மானுவேல் கிரெகாயர் உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். “பெண்கள் புறக்கணிக்கப்பட்டது மிகுந்த கவலைக்குரியது. உண்மைகள் வெளிச்சத்திற்கு வரவேண்டும்” என அவர் தெரிவித்தார்.
ஈபிள் கோபுர நிர்வாகம் SETE இந்த சம்பவம் தவறானது என ஒப்புக்கொண்டது. “பெண்களுடன் தொடர்புகளை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டது தவறு” என SETE தலைவர் அரியல் வேயில் கூறினார். இந்த சர்ச்சை பிரான்ஸ் அரசியல்வாதிகளிடமும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, BAPS அமைப்பு பாரிஸ் புறநகரில் தனது முதல் பெரிய இந்துக் கோவிலை திறந்து வைத்தது. இதில் கலந்து கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்த கோவில் இந்தியாவின் பண்பாட்டு மதிப்புகளை பிரான்சுக்கு கொண்டு செல்லும் பாலமாக இருக்கும் எனக் கூறினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |