கட்டுப்பாடுகள் இறுகலாம்... பிரித்தானியாவில் மீண்டும் அதிகரித்த முதியோர் இறப்பு
தடுப்பூசியிலிருந்து பாதுகாப்பு குறைந்து வருவதால், பிரித்தானியாவின் முதியோர்களிடையே கொரோனா இறப்புகள் மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனாவால் பாதிப்படையக் கூடிய மக்கள் உடனடியாக தங்கள் பூஸ்டர் தடுப்பூசியை தாமதப்படுத்தாமல் போட்டுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இல்லையெனில், டிசம்பர் மாதத்தில் கட்டுப்பாடுகள் இறுகலாம் என சுகாதாரத் துறை சுட்டிக்காட்டியுள்ளது. 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மூன்றாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த எண்ணிக்கையானது பாதிப்பை கட்டுப்படுத்த போதுமானதாக இருக்காது என்றே சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், ஆறு மாதங்களுக்குப் பிறகு தடுப்பூசியின் செயல்திறன் குறையத் தொடங்குவதால்,
இரட்டைத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பலர் மீண்டும் கொரோனா பாதிப்புக்கு இலக்கானதுடன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பிரித்தானியா ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சியின் தலைமை மருத்துவ ஆலோசகர் மருத்துவர் Susan Hopkins தெரிவித்துள்ளார்.
மேலும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மக்களில் அதிக கொரோனா இறப்புகள் பதிவாகும் நிலை இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், தடுப்பூசியின் செயல்திறன் குறையும் நிலையில் இருப்பவர்களும் கொரோனாவால் பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, மூன்றாவது டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும் என சுகாதார செயலரும் கோரிக்கை வைத்துள்ளார்.